தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். விஜய் தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்து 30 ஆண்டுகள் ஆகிறது. இவரது அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய்க்கு நேற்று தனது 49-வது பிறந்தநாள் ஆகும். இதனை சிறப்பாக கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், மரக்கன்றுகள் வழங்கி கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், பலவிதமான போஸ்டர்களையும் அடித்து நடிகர் விஜய் பிறந்தநாளை ஒட்டி தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திருச்சி கண்டோன்மெண்ட் மத்திய பேருந்து நிலையம் அருகே திருச்சி மாவட்ட நடிகர் விஜய் ரசிகர்களால் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அதில் எதிர்கால தமிழக சட்டமன்ற ஆளுமையே என்ற வாசகத்தோடு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. திருச்சி தெற்கு மாவட்ட தலைமை தளபதி மக்கள் இயக்கம் சார்பில் தமிழகம் போற்றும் வரலாறே மாநிலங்கள் வியக்கும் மகத்துவமே என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு புதுக்கோட்டை, ராணிப்பேட்டை உள்ளிட்ட நகராட்சிகளில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கவுன்சிலர் பதவிகளை கைப்பற்றியுள்ளனர். அதே போன்று எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் தனித்தோ, கூட்டணி வைத்தோ வெற்றி பெற்று அரசியலில் காலூன்ற வேண்டும் என்பதற்காக முக்கிய நகரங்களில் மாநாடு நடத்த திட்டம் உள்ளதாக தகவல் வெளியாகிறது. இந்நிலையில் திருச்சி என்றாலே திருப்பு முனை என திராவிட கட்சிகள் கூறி வந்த நிலையில், தற்போது நடிகர் விஜய்க்கும் திருச்சி திருப்பு முனையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் அவரது ரசிகர்கள் திருச்சி மையப்படுத்தி பல்வேறு திட்டங்களையும், நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்கள். மேலும் விரைவில் திருச்சியில் மாநாடு நடைபெறும் என கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பாக விஜய் ரசிகர்கள் சுவரொட்டிகள் மூலம் தங்களது கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து இன்று திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் விஜய் பிறந்தநாளை போற்றும் வகையில் திருச்சி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக பல்வேறு நலதிட்ட உதவிகளை ஏழை எளிய மக்களுக்கு வழங்கபட்டு வருகிறது.
இந்நிலையில் திருச்சி மாவட்ட தலைவர் கரிகாலன் தலைமையில் 150க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் இலவசமாக இரத்ததானம் செய்தனர். இதனை தொடர்ந்து திருச்சி மத்திய மாவட்டம் விஜய் மக்கள் இயக்கம் திருச்சி மாவட்ட தலைவர் செந்தில் தலைமையில் பார்வைகுறைபாடுயுடைய பெண்கள் அரசு மேல்நிலைபள்ளி மாணவிகள் 70 பேருக்கு இலவசமாக மதிய உணவை வழங்கினர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/