திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கோவில் முன் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த ஈ.வெ.ரா., சிலையை அகற்றிய வழக்கில் இந்துமக்கள் கட்சி நிர்வாகிகள் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அதில், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் வைஷ்ணவஸ்ரீயையும், தயானந்த சரஸ்வதியையும் சேர்த்து பொய் வழக்கு புனையப்பட்டது. இதுவரை அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. அந்த வழக்கிற்கான வாய்தா திருச்சி நீதிமன்றத்தில் மீண்டும் 17ம் தேதி முதன்மை ஜூடிசியல் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளனர். நீதித்துறையின் செயல்பாடுகள் விசித்திரமாகவும், வியப்பளிப்பதாகவும் உள்ளது. செந்தில் பாலாஜியின் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். ஆனாலும், திமு.க., வக்கீல்கள் ஆஜராகி, அவரது மனைவி வாயிலாக தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அதை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள், இரண்டு மாறுபட்ட தீர்ப்பை கொடுத்துள்ளனர்.  அமலாக்கத்துறை செய்வது சரிதான்; மருத்துவ சிகிச்சை முடிந்த பின்,  உடனடியாக சிறையில் அடைக்க வேண்டும் என்றும், செந்தில் பாலாஜியை கைது செய்து, சிறையில் அடைக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் தீர்ப்பு கூறி உள்ளனர். இந்த மாறுபட்ட தீர்ப்பு தலைமை நீதிபதியிடம் சென்றுள்ளது. அங்கேயாவது நீதி நிலைநாட்டப்படுமா என்று தெரியவில்லை.





மேலும், பிரதமர் நரேந்திர மோடி மீது திட்டமிட்ட களங்கம் கற்பித்து, அவருக்கு எதிராக, போலி ஆவணங்களை சமர்பித்து, அர்பன் நக்சல்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். நீதித்துறையில், இந்திய அரசுக்கு எதிராக அர்பன் நக்சல்களின் ஊடுருவல், வெளிநாட்டு சக்திகளின் ஊடுருவல் அதிகமாக உள்ளது. நீதித்துறை வாயிலாக, இந்திய அரசுக்கும், ஹிந்துக்களுக்கும், சனாதன தர்மத்துக்கும் எதிராக பல்வேறு காரியங்களை சாதித்துக் கொள்கின்றனர். பகவத் கீதையில் குண்டு வைத்து, கொலை செய்த வழக்கில், அரசாங்கம் இதுவரை மேல் முறையீட்டுக்கு செல்லவில்லை. பல வழக்குகளில் பயங்கரவாதிகள் தண்டிக்கப்படவில்லை. நீதிமன்றத்துக்குள் ஊடுருவி உள்ள சிறுபான்மை ஆதரவாளர்கள் வெளிநாட்டு சக்திகளால், இந்திய மக்கள் பாதிக்கப்படுகின்றனர். நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் தடுக்கப்படுகிறது. பல்வேறு அநீதிகள் நிகழ்வதால், நீதித் துறையில் சீர்திருத்தம் அவசியம். சீர்திருத்தம் செய்து, நீதி நிலைநாட்டப்பட வேண்டும். அதற்காகத் தான், பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான முன்னேற்பாடு செய்யப்படுகிறது. இது போன்ற நல்ல காரியங்கள் நடைபெறக் கூடாது என்று கம்யூனிஸ்ட்களும், வெளிநாட்டு சக்திகளும் கலவரத்தை தூண்டிவிட முயற்சிக்கின்றன. மத அடிப்படைவாத சக்திகள், பொது பொய் பிரச்சாரத்தை திட்டமிட்டு செய்கின்றனர். மதத்துக்கு ஒரு சட்டம் இருக்கக் கூடாது. ஒரே நாடு, ஒரே சட்டம் வேண்டும். அதற்கான கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. மேலும் கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால், கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. 10 லட்சம் பேரின் வேலை வாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதை பேச்சுவார்த்தை நடத்தி, முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.





மேலும் தி.மு.க.,வில் இருக்கும் மூத்த அமைச்சர் நேரு, அவரின் கட்சிக்காரர்கள் மீதே அனைத்து அஸ்திரங்களையும் ஏவி விடுவார். முதல்வர் ஸ்டாலின் சொன்னது போல் கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷன் இதற்கு உதாரணம், அவர்களின் திராவிட மாடல் ஆட்சி தான். கர்நாடகாவில் மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிக்கு, நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒருமைப்பாட்டுக்கு விரோதமாக செயல்படுகின்றனர்.
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணகை்கும் போர்வையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், கர்நாடகாவில் நடைபெறும் கூட்டத்தில்  அவர்களோடு கைகோர்த்து நிற்கின்றனர். இது, தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம். கோவை மக்களின் குடிநீர் ஆதாரத்தை பல இடங்களில் தடுக்கும் கேரள அரசுடன் கொஞ்சிக் குலாவுகின்றனர். தமிழக மக்களின் உரிமைகளை, தமிழக நலனை அண்டை மாநிலங்களில் அடகு வைக்கின்றனர். அ.தி.மு.க.,வினர் மீது புகார் கொடுத்த போதெல்லாம், கவர்னரிடம் அமைச்சரை நீக்கக் கோரியவர்கள் தி.மு.க.,வினர். அவருக்கு அதிகாரம் இருப்பதால் தான் மனு கொடுத்தீர்கள். கவர்னருக்கு எதிராக திட்டமிட்டு அவதுாறு பரப்புவதால், அவரது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும். தி.மு.க., அரசையும் கலைப்பதற்கான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசியல் அமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் வகையிலும் அமைச்சர் பதவியின் மகத்துவத்தை அவமதிக்கும் வகையில், தமிழக முதல்வரின் செயல்பாடு உள்ளது. அவர் சொந்த புத்தியில் செயல்படவில்லை. அவரை, கம்யூனிஸ்ட்டுகள் வழி நடத்துகின்றனர்.




குறிப்பாக தமிழகத்தில் தற்போது கட்டப் பஞ்சாயத்து, ரவுடித்தனம் அத்து மீறும் கட்சிகளின் செயல்பாடு, தி.மு.க.,வுக்குத் தான் கெட்ட பேரை ஏற்படுத்தும். தி.மு.க.,வின் பிரச்சார சாதனத்தை பயன்படுத்தியே, பட்டியலின மக்கள் நடத்தப்படுவதை எடுத்துக் காட்டுகின்றனர். இந்த ஆட்சியை தேச விரோதிகள் தான் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதை மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


சிதம்பரத்தில் கனகசபை அறிவிப்பையும், திருப்பரங்குன்றத்தில் வைத்த அறிவிப்பையும், பழனியில் வைத்த அறிவிப்பையும் எடுக்க வைத்துள்ளனர். இந்த விவகாரத்தில், தி.மு.க.,வினரும், கம்யூனிஸ்ட்களும் தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளனர். ஸ்ரீரங்கம் கோவில், சிதம்பரம் கோவில் நிர்வாகத்தை சீர்குலைப்பதே தி.க.,வினர், கிறிஸ்வர்கள் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் திட்டம். அவர்களின் துாண்டுதலுக்கு, தி.மு.க., பலியாகக் கூடாது. சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கான அந்தஸ்தை ரத்து செய்து, தேசிய மயமாக்க வேண்டும்” இவ்வாறு, அவர் தெரிவித்தார்.





மேலும் விஜய் மாணவர்களுக்கு பரிசு வழங்கியது குறித்து பேசிய அவர், “பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு பரிசு தொகை வழங்கியுள்ளார். ஆனால் நீட் தேர்வில் அகில இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவனை அழைத்து ஏன் பரிசு தரவில்லை என தெரியவில்லை. அவருக்கு தெரிந்த அரசியலை அவர் செய்கிறார். நடிகர் விஜய், அஜித் ஆகியோர் அரசியலுக்கு வரவேண்டும். ஆனால் நேர்மையாக வர வேண்டும். கருப்பு பணம் வைத்திருக்கக் கூடாது. லஞ்சம், ஊழல் பண்ண கூடாது. சாராயம் ஒழிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்ய வேண்டும். கடந்த காலங்கள் எதுவாயினும் இருக்கட்டும். தற்போது அண்ணாமலை நாங்கள் ஒன்றாக தான் செயல்படுகிறோம். திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக அத்தனை சக்திகளையும் ஒன்றிணைக்க விரும்புகிறோம். ஒரே நாடு, ஒரே தேர்தலை ஆதரிக்கிறோம். இது பல்வேறு முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இந்த அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். ஒட்டுமொத்த மந்திரி சபையும் மருத்துவமனையில் தான் நடக்கிறது” என்றார்.