அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள அங்கனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தந்தை தொல்காப்பியனின் 12-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் திருமாவளவன் கலந்து கொண்டு அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Continues below advertisement

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது  அவர் கூறுகையில், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இதைத் தான் பேசவேண்டும். இதை பேசக்கூடாது என்று வரையறை வகுத்து உள்ளதை பா.ஜ.க. அரசு உடனடியாக திரும்ப பெறவேண்டும். மேலும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து சர்ச்சை ஏற்பட்டு வருகிறது. இங்கு நிரந்தர பதிவாளர், நிரந்தர தேர்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் நிரந்தர துறைத் தலைவர்கள் யாரும் இல்லை. இதனால் பொறுப்பு பதவிகளுக்கு மட்டும் நியமனம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள்.  இந்நிலையில் புதிதாக ஒரு சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்தில்  எம்.ஏ முதுகலை பட்ட மேற்படிப்பிற்கு வரலாற்று பாடப் பிரிவுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் கேட்கப்பட்ட கேள்விகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, தமிழகத்தில் மிகவும் தாழ்த்தப்பட்ட சாதி என்னவென்று கேட்கப்பட்டுள்ளது என்பது கண்டிக்கதக்கது என்றார். 

Continues below advertisement

மேலும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தாழ்ந்த சாதி என்ற கேள்விக்கு அதில் உள்ள 4 பதில்களில் எந்த சாதியை குறிப்பிடுகிறது என்ற பிரச்சினை இல்லை. ஆனால் தாழ்ந்த சாதி இன்னும் இருக்கிறது என்ற கருத்தை மாணவர்களிடம்‌ திணிக்கிறார்கள். நினைவு படுத்துகிறார்கள் என்றால் இது அப்பட்டமான சாதி வெறியர்களின் இழிவு செயல். அதுவும் பெரியார் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் கேள்வி என்பது திட்டமிட்டே இடம் பெற செய்துள்ளனர்.  இதற்கு பொறுப்பேற்று துணை வேந்தர் பதவி விலகவேண்டும். இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக கவர்னர் மாநில அரசுக்கு எதிராக செயல்படுகிறார் என்பதை விட ஒட்டு மொத்த தேசத்திற்கு எதிராக செயல்படுகிறார். அவர் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியாக இருந்து செயல்பட்டும், கவர்னராக இருந்து செயல்படும் இந்த போக்கு கண்டிக்கத்தக்கது. இந்தியாவில் நாம் நுகர்கிற அனைத்து பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பார்கள்.  இதனால் இலங்கையைப் போன்று இந்தியாவிலும் பொருளாதார சரிவு விரைவில் வரும். சிங்களர்களுக்காக ஆட்சி நடத்துகிறோம் என்று  இலங்கையில் ஆட்சி செய்த ராஜபக்சே குடும்பத்தை அதே சிங்கள மக்கள் அவர்களது அரண்மனைக்கு உள்ளேயே சென்று விரட்டி அடித்தது போல இந்தியாவில் இந்துக்களுக்காக ஆட்சி நடத்துகிறோம் என்று கூறும் பா.ஜ.கவை இந்து சமூகம் விரட்டி அடிக்கும் காலம் வரும் என்றார்.