பிச்சைக்காரர்களுக்கு கூட ஐந்து ரூபாய் பத்து ரூபாய் கொடுக்கும் நிலையில் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு ரூபாய் உயர்த்தி கொடுத்து எங்கள் வயிற்றில் முதலமைச்சர் அடித்துள்ளார் என்று பால் உற்பத்தியாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். கொள்முதல் விலையை உயர்த்த வில்லை என்றால் வரும் 24ஆம் தேதி முதல் ஆவினுக்கு பால் வழங்க மாட்டோம் எனவும் பால் உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

Continues below advertisement

பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதலுக்கு நிலையாக மூன்று ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் எனவும் அதில் ஒரு ரூபாய் கொள்முதல் விலையாகவும் இரண்டு ரூபாய் ஊக்கத்தொகையாகவும் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் நேற்று சட்டசபையில் அறிவித்தார். ஆனால் தேர்தல் வாக்குறுதியில் கொள்முதல் விலையாக 44 ரூபாய் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் தற்போது கொள்முதல் விலை ஒரு ரூபாய் மட்டுமே முயற்சி வழங்கியிருப்பது பால் உற்பத்தியாளர்களிடம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

 

Continues below advertisement

இதுகுறித்து பால் உற்பத்தியாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் இன்று திருச்சி ஆவின் நிறுவனத்திற்கு வந்து அங்கு ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “முதலமைச்சர் விஜய் தேர்தல் வாக்குறுதியாக பால் கொள்முதலுக்கு 44 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால் தற்பொழுது ஒரு ரூபாய் மட்டுமே உயர்த்தி வழங்கி உள்ளார். இது எங்களுக்கு போதாது தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதலுக்கு 45 ரூபாய் வழங்குகிறார்கள். நாங்கள் அவர்களுக்கு அவர்களிடம் செல்லாமல் ஆவின் நிறுவனத்திற்கு பாலை வழங்கி வருகிறோம். ஆனால் பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் இருந்தால் நாங்களும் தனியார் நிறுவனத்திற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். எங்கள் பாலை எப்படி விரட்ட வேண்டும் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். அப்படி நாங்கள் பெற்றுக் கொள்வோம். அரசு இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்கவில்லை என்றால் வரும் 24ஆம் தேதி முதல் நாங்கள் ஆவின் நிறுவனத்திற்கு பால் விற்பனை செய்ய மாட்டோம்.

படிப்படியாக ஆவினில் பால் தட்டுப்பாடு கடுமையாக ஏற்படும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. அரசாங்கமே பொறுப்பு எனவே அந்த நிலை உருவாகாமல் இருக்க பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும். குறிப்பாக 50 ரூபாய் வரை உயர்த்தி தந்தால் தான் எங்களுடைய வாழ்வாதாரத்தை காத்துக் கொள்ள முடியும். பிச்சைக்காரர்களுக்கே 5 ரூபாய் பத்து ரூபாய் என பிச்சை போடுகிறோம். ஆனால் முதலமைச்சர் விஜய் பால் உற்பத்தியாளர்களுக்கு வெறும் ஒரு ரூபாய் உயர்த்தி வழங்கியுள்ளார். இதன் மூலம் முதலமைச்சர் எங்கள் வயிற்றில் அடித்துள்ளார். கொள்முதல் விலையை ரூ.50-க்காக உயர்த்தி வழங்க வேண்டும்” என கேட்டுக்கொண்டனர்.