புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மைனாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 37). இவரது மனைவி ராஜலெட்சுமி. இந்த தம்பதியினருக்கு ஹரித் (8), ஹர்சன் (4) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். உள்ளூரில் வேலை பார்த்து கிடைத்த வருமானம் குடும்பம் நடத்த சுரேசுக்கு போதுமானதாக இல்லை. குழந்தைகளின் படிப்பு உள்ளிட்டவைகளை சமாளிக்க முடியாமல் தவித்தார். வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றால் கைநிறைய சம்பாதிக்கலாம் என்று உற்றார், உறவினர்கள், நண்பர்கள் கூறியதையடுத்து அதற்கான ஏற்பாடுகளையும் சுரேஷ் மேற்கொண்டார். அதன்படி சுரேஷ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் உலகின் பணக்கார நாடு என்று புகழப்படும் புருனே நாட்டிற்கு கூலி வேலைக்காக சென்றார். அங்கு 3 மாதம் வேலை பார்த்த நிலையில் திடீரென்று அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து உடன் பணியாற்றும் நண்பர்கள், உறவினர்கள் மூலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சிகிச்சையிலிருந்த அவர் குணமடைந்து வருவதாக நண்பர்கள் மூலம் மனைவி ராஜலெட்சுமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணவர் முழுமையாக குணமடைந்து விடுவார் என்ற நம்பிக்கையில் இருந்த ராஜலெட்சுமிக்கு கணவர் கோமா நிலைக்கு சென்று விட்டதாக அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. மேலும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்குள் பேரிடியாக கடந்த டிசம்பர் 25-ந்தேதி சுரேஷ் இறந்துவிட்டதாக அங்கிருந்த நண்பர்கள் கூறியுள்ளனர்.
இதனால் இடிந்து போன ராஜலெட்சுமி கணவரின் முகத்தையாவது பார்க்க வேண்டும் என அழுது புரண்டார். ஆனால் ரூ.24 லட்சம் கட்டினால் மட்டுமே உடலை வாங்க முடியும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இதனையடுத்து தனது கணவர் உடலை மீட்டுத்தர வலியுறுத்தி கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரிடம் அவர் மனு அளித்தார். ஆனாலும் உடலை இதுவரை வாங்க முடியாத சூழ்நிலையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு தனது கணவர் உடலை பெற்றுத்தர வேண்டும் ராஜலெட்சுமி மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கணவரை இழந்து வாடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டு உள்ளனர். இறந்த கணவரின் முகத்தைக்கூட காணமுடியாமல் மனைவிக்கும், வாடிய முகத்துடன் தவிக்கும் குழந்தைகளுக்கும் உறவினர்கள் கூறும் ஆறுதல் போதுமானதாக இல்லை. குடும்ப வறுமை காரணமாக வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று இறந்த கணவரின் உடலை வாங்க 15 நாட்களுக்கும் மேலாக கண்ணீருடன் போராடி வரும் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்