திருச்சி மாவட்டம்  மேலகல்கண்டார்கோட்டை அண்ணா தெருவை சேர்ந்தவர் முகமது சையது. இவரது மனைவி ஷாகிதா பேகம் (வயது 34). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கடந்த 15-ந் தேதி வேலைக்கு சென்ற ஷாகிதாபேகம் மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் அவரது வீட்டில் இருந்து திடீரென அலறல் சத்தம் கேட்டதால் அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று கதவை தட்டினர். ஆனால் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. மேலும் அலறல் சத்தம் அதிகரித்ததால் அக்கம் பக்கத்தினர் அந்த வீட்டின் முன்பு திரண்டனர். அப்போது முகத்தில் துணியை கட்டியிருந்த ஒரு வாலிபர், வீட்டின் பின்பக்க ஓட்டை பிரித்து வெளியேறி கீழே குதித்து தப்பி ஓடியதை கண்டனர். மேலும் இதுகுறித்து பொன்மலை காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் ஷாகிதா பேகம் கிடந்தார். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பொன்மலை காவல்துறை அதிகாரிகள்  விசாரணை நடத்தினர்.




இதனை தொடர்ந்து காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், ஷாகிதா பேகத்தின் மூத்த மகள் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். அவருடன் மேலகல்கண்டார்கோட்டை மூகாம்பிகை நகரை சேர்ந்த தேவராஜின் மகன் ஜோசப்ராஜ் என்ற மணிகண்டன் (24) பழகி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் மணிகண்டன் அந்த மாணவியை காதலித்ததாக தெரிகிறது. இதையடுத்து மாணவியை பெற்றோர் கண்டித்ததை தொடர்ந்து, அந்த மாணவி மணிகண்டனிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இதனால் மாணவியின் பெற்றோரை சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்ட மணிகண்டன், இதற்காக சம்பவத்தன்று மதியம் வீட்டிற்கு வந்து ஷாகிதா பேகத்திடம் பேசியுள்ளார். அப்போது அந்த மாணவி தன்னிடம் பேச அனுமதிக்கவில்லை என்றால், கத்தியால் கையை கிழித்துக்கொள்வேன் என்று கூறி, தான் வைத்திருந்த கத்தியை கையில் எடுத்து மிரட்டி உள்ளார். ஆனால் ஷாகிதாபேகம் சமரசம் ஆகாததால், அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து ஷாகிதா பேகத்தை சரமாரியாக வெட்டினார்.




இந்நிலையில் அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதால், அங்கிருந்து மணிகண்டன் தப்பி ஓடியுள்ளார், என்பது தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஷாகிதா பேகம், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பொன்மலை காவல்துறையினர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண