திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், மஸ்கட், ஓமன், அபுதாபி, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்று வருவது வாடிக்கை, இவர்களுக்கு  போதுமான விமான சேவை இல்லாத காரணத்தினால் திருச்சியில் இருந்து இலங்கைக்கு சென்று, அங்கிருந்து வளைகுடா நாடுகளுக்கு சென்று வருகின்றனர். இதனால் இலங்கையில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் விமான சேவையானது போதுமானதாக இல்லாத காரணத்தினால் விமான பயணிகள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். 




இந்த நிலையில் இலங்கையில் இருந்து திருச்சிக்கு மேலும் ஒரு விமான புதிய சேவையை இயக்குவதற்காக பிட்ஸ் ஏர் எனும் நிறுவனம் குளிர்கால அட்டவணையில் நேரம் ஒதுக்கீடு செய்ய கோரிக்கை விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து இலங்கையில் இருந்து வாரத்திற்கு மூன்று நாட்கள் இயக்குவதற்காக நேரம் ஒதுக்கீடு செய்து விமான நிலைய ஆணையத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் பிட்ஸ் ஏர் நிறுவனத்தின் சார்பில் டிசம்பர் 8ம் தேதி முதல் வியாழன், சனி, ஞாயிறு உள்ளிட்ட நாட்களில் விமான சேவைகளை இயக்க உள்ளது. குறிப்பாக  வியாழக்கிழமை காலை 10:25 மணிக்கு இலங்கையில் இருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு 11 .25 மணிக்கு வந்து சேரும், மீண்டும் திருச்சியில் இருந்து 12.25 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 1.25 மணிக்கு கொழும்பு விமானத்தை சென்றடையும். மேலும் சனிக்கிழமைகளில் மதியம் 12.45 மணிக்கு இலங்கையில் இருந்து புறப்பட்டு 1.45 மணிக்கு திருச்சி விமானநிலையத்தை வந்தடையும். மீண்டும் திருச்சியில் இருந்து 2.45 மணிக்கு புறப்பட்டு 3.45 மணிக்கு இலங்கை சென்றடையும்.




இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணிக்கு இலங்கையில் இருந்து புறப்பட்டு 11 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும்,  மீண்டும் 11.45 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு 12.45 மணிக்கு இலங்கை சென்று அடையும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் சிரமம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பினால் விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.