திருச்சி மாநகர எல்லையில் பஞ்சப்பூர் அமைந்துள்ளது. சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்தில் அமைந்துள்ள இந்த பகுதியில் தான் ஒருங்கிணைந்த பஸ்நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் அரைவட்ட சுற்றுச்சாலை சந்திப்பில் பஞ்சப்பூர் காவல் சோதனை சாவடி அமைந்துள்ளது. முக்கியமான சந்திப்பு என்பதாலும், வாகன போக்குவரத்து அதிகம் உள்ள பகுதி என்பதாலும் இந்த சந்திப்பில் இரவில் ஒளிரும் எச்சரிக்கை மின்விளக்குகளும், வாகனத்தின் வேகத்தை கட்டுப்படுத்த சாலையில் இரும்பு தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் மட்டும் தொடர்ச்சியாக கன்டெய்னர் லாரி, டேங்கர் லாரி என்று 5 கனரக வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின. இரவில் நடந்த இந்த விபத்து அனைத்திலும் வேகத்தை குறைக்க வைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகள் மீது மோதிதான் வாகனங்கள் கவிழ்ந்துள்ளன. அப்போது, வாகனங்களை டிரைவர்கள் அதிவேகமாகவும், தூக்க கலக்கத்திலும் ஓட்டியதால் விபத்து நடந்ததாக காரணம் கூறப்பட்டது. இந்த விபத்துகளில் உயிர்சேதம் எதுவும் ஏற்படாவிட்டாலும், அங்கிருந்த இரவில் ஒளிரும் எச்சரிக்கை விளக்குகள், இரும்பு தடுப்புகள், கண்காணிப்பு கேமராக்கள் சேதமடைந்தன. இதனால் இந்த பகுதியில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

 



 

இந்தநிலையில் நேற்று மதியம் சிவகாசியில் உள்ள அச்சகத்தில் இருந்து பத்திகள், சாம்பிராணி `பேக்கிங்' செய்ய பயன்படும் சிறிய அட்டைபெட்டிகள் பண்டல், பண்டல்களாக 23 டன் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சத்தீஸ்கர் மாநிலம் நோக்கி புறப்பட்டது. லாரியை நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள செல்லியம்பாளையம் பகுதியை சேர்ந்த சரண்ராஜ் (வயது 28) ஓட்டி வந்தார். அவருடன் மாற்று டிரைவராக கதிர்வேல் (30) உடனிருந்தார். அந்த லாரி நேற்று மாலை 3.50 மணி அளவில் திருச்சி பஞ்சப்பூர் சோதனை சாவடி அருகே வந்தது. அங்கிருந்த இரும்பு தடுப்புகளை லாரி கடந்த போது, ஒரு இரும்பு தடுப்பில் மோதி, லாரி இடதுபுறமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக லாரி டிரைவர், மாற்று டிரைவர் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர். சாலையின் நடுவில் இடதுபுறம் கவிழ்ந்ததால் போக்குவரத்து எதுவும் பாதிக்கப்படவில்லை. இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் மாற்று டிரைவர் கதிர்வேல் மட்டும் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண