திருச்சி மாநகராட்சியை குப்பை இல்லாத மாநகராட்சியாக மாற்ற நிர்வாகம் கடும் பிரயாசித்தம் செய்து வருகிறது. குப்பைகள் கொட்டுவதற்கு வசதியாக ஆங்காங்கே குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. புதிய வாகனங்களும் வாங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. இருந்த போதிலும் திறந்த வெளியில், சாலையோரங்களில் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டுவது பொதுமக்களின் வாடிக்கையாக இருக்கிறது. இதனை தடுப்பதற்கு பெண் தூய்மை பணியாளர்கள் மூலம் பல இடங்களில் கோலமிட்டும் பார்த்தனர். இருப்பினும் நிரந்தர தீர்வு காண முடியவில்லை. இதற்கிடையே பொது இடங்களில் குப்பை கொட்டி செல்பவர்களை அடையாளம் காண்பதிலும் சிரமம் உள்ளது. ஆகவே பொது இடங்கள் மற்றும் சாலை ஓரங்களில் திறந்த வெளியில் குப்பை கொட்டுவதை தடுக்க அந்தப் பகுதிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுபற்றி மாநகராட்சி மேயர் மு.அன்பழகனிடம் இன்று கேட்டபோது கூறியதாவது, திருச்சி மாநகராட்சியை குப்பை இல்லாத மாநகராட்சியாக மாற்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு என்பது மிகவும் அவசியமானது. பொறுப்பற்ற முறையில் சிலர் குப்பைகளை பொது இடங்களில் கொட்டிச் செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ஆகவே இதனை தடுப்பதற்கு அதிகம் குப்பை கொட்டப்படும் இடங்களில் ஒரு மாதத்திற்குள் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படும்.
மேலும் தடையை மீறி குப்பை கொட்டுபவர்களுக்கு அவர்கள் கொட்டும் குப்பை மற்றும் கழிவுகளை பொறுத்து ரூ.5000 முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்படும். திருச்சி மாநகராட்சியில் சக்கரம் பொருத்திய 100 குப்பை தொட்டிகள் வாங்குவதற்கு டெண்டர் விடப்பட இருக்கிறது என்றார். திருச்சி தூய்மையான மாநகராட்சியாக மாற்ற பல்வேறு திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக சாலைகளை சீரமைப்பது, சாக்கடைகளை தூர்வாரி அவற்றை ஒழுங்குபடுத்தும் பணிகள் அனைத்து இடங்களிலும் தீவிரமாக செய்யபட்டு வருகிறது. ஆகையால் பொதுமக்கள் குப்பைகளை சாலைகள், கால்வாய்கள், ஏரி குளங்கள், போன்ற இடங்களில் தேவையில்லாமல் கொட்டுவது என தேவையற்ற செயல்களில் ஈடுபடுவதால் சுகாதாரம் மிகவும் பாதிக்கபட்டுள்ளது. இதனால் குழந்தைகளுக்கு மட்டும் அல்லாமல் அனைவருக்கும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது.. பல பகுதிகள் மனை அங்கீகாரம் பெற்று குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டாலும், அடிப்படை கட்டமைப்பு வசதிகளான மழைநீர் வடிகால், குப்பை கொட்டுவதற்கான தொட்டிகள் இல்லாமல், தெருக்களில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுவதும், வீதிகளில் குப்பை கொட்டுவதும் தொடர்ந்து வருகிறது.
அதேபோல், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், வீட்டின் அருகே குட்டை போல் தேக்கி வைக்கப்படுகிறது. நகராட்சி வாயிலாக குப்பையை அள்ளவும், சாக்கடை கால்வாய்களை சீர் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இந்த நிலை தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த சில தினங்களாக, பெய்த மழையால், அடித்து வரப்படும் குப்பைக்கழிவுகள் ஆங்காங்கே தேங்கி நின்று சுகாதாரம் பாதிக்கப்பட்டது.மேலும் மழையின்போது, கழிவு நீர் சாக்கடைகளில், அதிகளவில் தண்ணீர் தேக்கமடைவதால், கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பாதிப்பு ஏற்படுகிறது. ஆகையால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என தெரிவித்தனர். குறிப்பாக மக்கள் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்கவேண்டும் எனவும், நமது மாநகராட்சியை சிறந்த இடமாக மாற்றுவதற்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்