பிறந்த குழந்தைக்கு விளக்கெண்ணெய் கொடுத்ததால் உயிரிழந்த பரிதாபம் திருச்சி மாவட்டம் முசிறி அருகே நடந்துள்ளதை தொடர்ந்து, சுயமாக மருத்துவம் செய்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் அறிவுரை கூறியுள்ளார்.


திருச்சி மாவட்டம் ,மணச்சநல்லூர் அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பாலமுருகன். கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இருவருக்கும் ஒன்றரை வயதில் பிரதீப் குமார் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இரண்டாவது குழந்தையின் பிரசவத்திற்காக பாலமுருகன் மனைவி சாந்தி அவரது தாய் வீடான முசிறி தாலுக்கா முத்தையநல்லூர் கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு 20.10.2021அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.




பிறந்த குழந்தைக்கு சன்விகா என பெயரிட்டு வளர்த்து வந்த நிலையில் கடந்த 16.11.2021 அன்று குழந்தையின் வயிற்றை சுத்தம் செய்வதற்காக குழந்தையின் தாய் சாந்தி குழந்தைக்கு இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் கொடுத்துள்ளார். இதில் அன்றிரவு குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பெற்றோர்கள் அருகிலுள்ள தண்டலை புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தையை சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின் 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சையில் இருந்த குழந்தை சன்விகா 30.12.2021 அன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். 


இந்தச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜெம்பநாதபுரம் போலீசார் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இந்தச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.




இந்தச் சம்பவத்திற்கு பிறகு மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன், “கை வைத்தியம் மற்றும் மருந்தகங்களில் சுயமாக மருந்துகளை வாங்கி உட்கொள்வது உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்பு ஏற்படுகிறது. மருத்துவம் படிக்காத நபர்களிடம் மருத்துவம் செய்து கொள்வதாலும் பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே இதுபோன்ற தவறை பொதுமக்கள் செய்யக்கூடாது. மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்ப்பவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண