திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு வெளிநாடுகளை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் வழக்கு முடிவதற்கு முன்பாக வெளிநாட்டுக்கு தப்பி செல்லாமல் இருப்பதற்காக இந்த சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இந்த முகாமில் இலங்கை, வங்கதேசம், நைஜீரியா, ருவாண்டா, பல்கேரியா, தெற்கு சூடான் உள்பட பல நாடுகளை சேர்ந்த 156 பேர் உள்ளனர். இவர்கள் தங்கள் மீதான வழக்குகளை விரைந்து முடித்து சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அவ்வப்போது போராட்டமும் நடத்தி வருவது உண்டு. கடந்த மாதம் 20-ந் தேதி திருச்சி சிறப்பு முகாமில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். கேரளாவில் போதைப்பொருள் சிக்கிய வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. அப்போது முகாமில் இருந்து தங்க நகைகள், பணம், செல்போன்கள், கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து அமலாக்கத்துறையினரும் சிறப்பு முகாமில் சோதனை நடத்தினர்.




இந்தநிலையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில், போலீஸ் துணை கமிஷனர்கள் சுரேஷ்குமார், ஸ்ரீதேவி, அன்பு ஆகியோர் தலைமையில் போலீஸ் உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 300-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று அதிகாலை 4 மணி முதல் சிறப்பு முகாமிற்குள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் ஒவ்வொரு அறையாக சென்று நடத்தப்பட்ட சோதனையில் 60 செல்போன்கள், ஒரு டேப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. நேற்று அதிகாலை தொடங்கிய சோதனை பகல் 12 மணி வரை நடைபெற்றது. போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையை கண்டித்தும், தங்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை திரும்ப ஒப்படைக்கக்கோரியும், முகாமில் உள்ளவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது இலங்கையை சேர்ந்த 4 பேர் திடீரென மரத்தில் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டல் விடுத்தனர். உடனே வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து, மரத்தில் ஏறி நின்றபடி கூச்சலிட்டனர். இதனால் சிறப்பு முகாம் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 




தொடர்ந்து திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள அகதிகள் முகாமில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகிறார்கள். போலி பாஸ்போர்ட் விவகாரம் மற்றும் துப்பாக்கிகள் சப்ளை செய்த விவகாரம் என பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வெளியில் இருப்பவர்கள் சிலர் உதவி செய்வதாக தொடர்ந்து தகவல் வந்து அடிப்படையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி பல்வேறு ஆவணங்கள் மற்றும் செல்போன், மடிக்கணினியை பறிமுதல் செய்தனர். மேலும் பாதுகாப்பு உறுதிப்படுத்த மத்திய சிறைக்கு என்.ஆர்.ஐ அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் போதை பொருள் விற்பனை,  போதைப்பொருள் பதுக்குதல், உள்ள பல்வேறு செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து  திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின்படி 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அதிரடி சோதனை ஈடுபட்டதால்  அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண