திருச்சியில் பிரபல ரவுடி ஓட ஓட வெட்டிக் கொலை - பலிக்கு பலி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பழைய பால்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் நிஷாந்த் (21) பிரபல ரவுடியான இவர் மீது காந்தி மார்க்கெட், தில்லை நகர் மற்றும் கோட்டை காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. மேலும் இவருக்கும் வாமடம் பகுதியைச் சேர்ந்த வாழைக்காய் விஜய் என்பவருக்கும் கஞ்சா விற்பது தொடர்பாக ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது. ஏற்கனவே கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருச்சி தென்னூர் வாமடம் சப்பாணி கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜய் என்கிற வாழைக்காய் விஜய் (20). நேற்று முன்தினம் மதியம் இவர் தனது வீட்டின் அருகே உள்ள ரேஷன் கடை அருகில் நின்று கொண்டிருந்தபோது அங்கு திடீரென வந்த 7 பேர் கொண்ட கும்பல் அவரை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தது. இதனை தடுக்க வந்த விஜயின் தாயார் செல்விக்கும் (45) அரிவாள் வெட்டு விழுந்தது. அவர் படுகாயத்துடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.




விஜய் கொலை தொடர்பாக ஜீவாநகர் லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்த ஜெயச்சந்திரன் (40) , சோமரசம்பேட்டை நாடார் சத்திரத்தை சேர்ந்த பிரவீன் காந்த் (20) , ஜீவா நகரைச் சேர்ந்த பிரதீப் (22), தென்னூர் வாமடத்தை சேர்ந்த குணசேகரன் (25), ஜீவா நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த கார்த்தி (20), ஜீவா நகர் காமராஜர் நகரைச் சேர்ந்த நிஷாந்த் (21) , தென்னூர் வா மடத்தைச் சேர்ந்த சிவபிரசாத் (19) ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் ஜெயச்சந்திரன் தவிர மற்ற 6 பேரும் நேற்று முன்தினம் இரவோடு, இரவாக கைது செய்யப்பட்டனர். தலைமறைவான ஜெயச்சந்திரன் ஜீவா நகர் பகுதியில் பிரபல ரவுடி ஆவார். இவர் மீது திருச்சி கோட்டை, தில்லைநகர் போலீஸ் நிலையங்களில் அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, திருட்டு, வழிப்பறி தொடர்பான வழக்குகளும் சோமரசம்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் உள்ளது. அவரை போலீசார் தொடர்ந்து வலைவீசி தேடி வருகிறார்கள். ஜீவா நகரைச் சேர்ந்த ஜெயச்சந்திரனின் நண்பர் முருகேசன் என்பவருக்கும், விஜய்க்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பான பிரச்சினை இருந்து வந்தது.


இதுதொடர்பாக முருகேசன் அளித்த புகாரின் அடிப்படையில் தில்லைநகர் போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜயை கைது செய்தனர். மேலும் விஜயும், அவரது நண்பர்கள் டோக்கியோ என்கிற நாகூர் அனிபா மற்றும் துரை ஆகியோர் ஜீவா நகருக்கு சென்றனர். அங்கு அவர்கள் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு நிஷாந்த் மற்றும் பிரவீன், மதியழகன் என்பவரை அவரது வீட்டில் இறக்கி விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் வந்தனர். இந்த நேரத்தில் விஜய் மதியழகனை தாக்கி அவர் வைத்திருந்த 6 ஆயிரம் ரூபாய் பணத்தை வழிப்பறி செய்தார். இதனை பிரவீனும், நிஷாந்தும் தட்டி கேட்டனர். அப்போது அவர்களையும் தாக்கிவிட்டு விஜய் தனது வீட்டிற்கு சென்றுவிட்டார். இது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாகவே ஜெயச்சந்திரன் உள்பட 7 பேரும் சேர்ந்து விஜயை வெட்டி கொலை செய்துள்ளனர். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.




மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிஷாந்த் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த  மாதம் சிறையிலிருந்து வெளியே வந்தார். இந்த சூழலில் இன்று அதிகாலை மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் அருகே உள்ள கழிவறையில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக சென்ற நிஷாந்தை பின்தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல்  அரிவாள், கத்தி உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்களால் நிஷாந்தை ஒட ஒட  வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த காந்தி மார்க்கெட் காவல் நிலைய காவல்துறையினர் மற்றும் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பழிக்கு பழியாக நடைபெற்ற இந்த கொலை சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.