புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தனது குடும்பத்தினருடன் கடந்த ஆண்டு மே மாதம் கோவில்வீரக்குடி என்ற கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவுக்கு வந்திருந்தார். அப்போது சிறுமியின் உறவினரான கோவில்வீரக்குடியை சேர்ந்த ரஞ்சித் (வயது 23), துரைராஜ் (24) ஆகிய இருவரும் சேர்ந்து சிறுமியை கட்டாயப்படுத்தி தனித்தனியே பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இதனை நோட்டமிட்ட புதுப்பட்டியை சேர்ந்த ஆனந்த் (22) என்பவரும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் கிராமத்துக்கு அருகே பரவயல் கிராமத்தை சேர்ந்த கடலோர காவல் படையில் போலீஸ்காரராக வேலை பார்க்கும் வடிவேல் என்பவரும் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த 7 மாதங்களாக 4 பேரும் தனித்தனியே சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம் என்று சிறுமியை மிரட்டி உள்ளனர். ஒரு கட்டத்தில் 4 பேரின் தொடர் பாலியல் தொல்லையால் சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து தனக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து, நடந்ததை தனது தந்தையிடம் சிறுமி கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து சிறுமியை அவரது பெற்றோர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று டாக்டர்களிடம் காண்பித்தனர். அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி 6 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா மற்றும் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித், துரைராஜ், ஆனந்த் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான போலீஸ்காரர் வடிவேலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வடிவேலுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்