அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் வகையில் தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள் தீவிரமான கண்காணிப்பு பணிகளை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் பல இடங்களில் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ரேஷன் அரிசிகளை பதுக்கி வைத்து, அதை மற்ற மாநிலங்களுக்கு கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவற்றை முற்றிலும் தடுக்க மாவட்ட நிர்வாகம் தரப்பில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மணிமனோகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்பாளையம் புவனேஸ்வரி நகர் பகுதியில் ஒருவர் ரேஷன் அரிசியை இருசக்கர வாகனத்தில் கடத்திச்செல்வதாக தகவல் வந்தது. உடனே போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனை செய்த போது, மண்ணச்சநல்லூர் அத்தாணி கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் 100 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளுடன் சிக்கினார்.




மேலும், அவர் கொடுத்த தகவலின் பேரில் அங்கு குடோனில் மூட்டை மூட்டையாக 3,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பன்னீர் செல்வத்தை கைது செய்த போலீசார், இருசக்கர வாகனம் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து இருந்த குடோன் உரிமையாளரான காந்திநகரை சேர்ந்த தியாகராஜனை தேடி வருகிறார்கள். மேலும் திருச்சி மாவட்ட அதிகாரிகள் கூறும்போது..  ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பவம் அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. கடந்த சில மாதங்களில் இதுபோன்ற குற்றசம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையில் அடைக்கபட்டுள்ளனர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய புதிதாக குழுமைக்கபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக கடத்தலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.