ஒட்டுமொத்த தமிழ்நாடு மட்டும் இல்லாமல் இந்தியாவின் தலைப்புச் செய்திகளில் ஒன்றாக இருப்பது மிக்ஜாம் புயல்தான். இந்த புயல் தலைநகர் சென்னை உட்பட காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என நான்கு மாவட்டங்களிலும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த மக்களையும் வீட்டில் முடக்கினாலும் புயலை எதிர்கொள்வது என்பது சென்னைக்கோ சென்னை வாசிகளுக்கோ அல்லது அரசுக்கோ புதிய விஷயமல்ல. ஆனால் ஒவ்வொரு புயலும் தனித் தனி அனுபவத்தை தருகின்றது. 2015ஆம் ஆண்டு சென்னை வெள்ளக்காடாக மாறியது. அதன் பின்னர் வந்த வர்தா புயல் சென்னையின் பெரும்பாலான மரங்களை வேரோடு சாய்த்தது. தற்போதெல்லாம் சென்னையை புயல் தாக்குகின்றது என்றால் “நாங்க எல்லாம் 2015 வெள்ளத்தையே பாத்துட்டோம், வர்தா புயல விடவுமா பாதிப்புகளை ஏற்படுத்திடும்” என்றெல்லாம் கேள்விகள் கேட்காதவர்கள் இல்லை. 




ஆனால் ஒவ்வொரு புயலும் தனித்தனி அனுபவத்தை தருவதைப் போல் மிக்ஜாம் புயலும் தனி அனுபவத்தை தந்துள்ளது. சென்னையில் டிசம்பர் 3ஆம் தேதி இரவு பெய்யத்தொடங்கிய மழை நேற்று இரவு வரை புயல் சென்னையைக் கடக்கும்வரை தொடர்ந்து மழை பெய்தது. இதனால் சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகள் மளமளவென நிரம்ப ஆரம்பித்தது. காஞ்சிபுரம் திருவள்ளூர், செங்கல்பட்டில் பெய்த கனமழையால் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகமானது. அதிவேகமாக காற்று வீசியதால், கடல் மிகவும் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் ஏரிகளில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீர் எல்லாம் அடையாறு, கூவம் மற்றும் பக்கிம்காம் கால்வாய் வாயிலாக கடலில் கலக்காமல் அப்படியே தேங்க ஆரம்பித்தது. இதனால் சென்னையின் குடியிறுப்பு பகுதிகளில் நீர் அணைக் கட்டுகளைப் போல் காட்சி அளித்தது. அடுக்குமாடி குடியிருப்புகளில் தரைத் தளங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது. கார்கள் தொடங்கி மிகப்பெரிய வாகனங்கள் வரை அனைத்தும் தண்ணீரில் மிதந்த காட்சிகளைப் பார்த்த போது சுனாமியை நியாபகப்படுத்தியது. விமானம், ரயில் மற்றும்  மாநகர பேருந்து சேவைகள் முடங்கியது.


இப்படி சென்னை முற்றிலுமாக வெள்ளக்காடாக மாறுவதற்கு காரணமே மூன்று மாதங்களில் பெய்யவேண்டிய மழை 30 மணி நேரத்தில் பெய்ததுதான் காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 47 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த அளவிற்கு அதிகப்பாடியான மழை பெய்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு வெள்ளம் வந்த போதுகூட சென்னைக்கு வந்த மழையின் அளவு 33 செ.மீதான். ஆனால் நேற்று பெய்த மழையின் அளவு என்பது 34 செ.மீட்டர். இப்படியான நிலையில் சென்னையை அரசு ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரும் சென்னையை மீட்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர். முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட மின்சாரம் தற்போது படிப்படியாக வழங்கப்பட்டு வருகின்றது. இது மட்டும் இல்லாமல் சென்னை முழுவதும் வெள்ள நீரினை வெளியேற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அரசு தெரிவித்துள்ளது.




இந்நிலையில் மிக்ஜாம் புயல் நிவாரண பணிக்கு சென்னைக்கு திருச்சி மாநகராட்சி மூலம் 250 தூய்மை பணியாளர்கள் மற்றும் 10 தூய்மை பணி மேற்பார்வையாளர்கள், 3 சுகாதார அலுவலர்கள்  வெள்ள தடுப்பு உபகரணங்களுடன் 5 பேருந்துகள் மூலம் மேயர் மு. அன்பழகன் அவர்கள், மாநகராட்சி ஆணையர் மரு.இரா.வைத்திநாதன் ஆகியோர் கொடி அசைத்து வழி அனுப்பி வைத்தனர். அருகில் மண்டலத் தலைவர் திருமதி. துர்கா தேவி, நகர் நல அலுவலர் திரு. மணிவண்ணன், மாநகராட்சி  உதவி ஆணையர்கள்,சுகாதார அலுவலர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.