திருப்பதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்தை பெரம்பலூரை சேர்ந்த மணிகண்டன் (வயது 39) என்பவர் ஓட்டி சென்றார். பேருந்தில்  24 பயணிகள் பயணம் செய்தனர். அந்த பேருந்து நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள கள்ளிக்குடி புதியமார்க்கெட் கட்டிடம் எதிரே வந்தபோது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. பேருந்தில்  இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இந்த விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் பேருந்தில்  இருந்த பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் டிரைவர் உள்பட 24 பேரும் லேசான காயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர்தப்பினர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மணிகண்டம் போலீசார் மாற்று பேருந்தை ஏற்பாடு செய்து பயணிகளை அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் விரைந்து செயல்பட்டு கிரேன் மூலம் பேருந்தை அப்புறப்படுத்தினர். அதன் பின் போக்குவரத்து சீரானது. 




திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆலம்பட்டி பிரிவு ரோட்டில் மேம்பால பணியில் சர்வீஸ் சாலை முறையாக அமைக்காமல் ஆங்காங்கே மண் மற்றும் கற்குவியல்கள் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் இதே பகுதியில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மதுரையை சேர்ந்த சட்ட கல்லூரி மாணவர் ஒருவரின் வலது கால் முறிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சர்வீஸ் சாலையை விபத்து ஏற்படாத வண்ணம் முறையாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.