தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த 28 ஆம் தேதி தொடங்கியது. இதில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு: சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இரண்டாவது நாளான இன்று, 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. கடந்த கல்வியாண்டைப் பொருத்தவரை இந்த இடஒதுக்கீட்டின் கீழ் 433 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்கள் கிடைத்தன.
இந்தநிலையில், நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்று இந்த உள்ஒதுக்கீட்டின் கீழ் 2,135 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் நடைபெறும் கலந்தாய்வின் முதல் நாளான இன்று, 719 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்களில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 324 பேருக்கும், சுயநிதி கல்லூரிகளில் 113 பேருக்கு எம்.பி.பி.எஸ்., இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதேபோன்று, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 13 பேருக்கும், சுயநிதி கல்லூரிகளில் 84 பேருக்கும் பி.டி.எஸ்., இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த உள்ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 534 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்த 7 மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அவர்கள் அரசின் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் நேற்று நடந்த மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் கலந்து கொண்டனர். இதில் தீபிகா மதுரை அரசு மருத்துவக்கல்லூரியிலும், வாலண்டினா தேனி அரசு மருத்துவக்கல்லூரியிலும், கனிகா புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி, சுவாதி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி, யமுனா திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி, நிஷாலினி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியிலும் எம்.பி.பி.எஸ். படிக்க தேர்வு செய்தனர்.
மேலும், நிஷா என்ற மாணவி திருநெல்வேலி பல் மருத்துவக் கல்லூரியில் படிக்க தேர்வானார். இந்நிலையில் தங்களது மகள்களுக்கு மருத்துவம் படிக்க மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்ததால் அந்த மாணவிகளின் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்திலேயே கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தான் அதிக அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்கச் சென்று வருகிறார்கள்.
அந்தவகையில் கடந்த 2 ஆண்டுகளில் 11 மாணவிகள் மருத்துவக்கல்லூரிக்கு அனுப்ப பயிற்சி அளித்த தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளை பலரும் பாராட்டி வருகின்றனர். இதேபோல, கடந்த ஆண்டு இதே கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவிகள் 4 பேர் டாக்டருக்கு படிக்க தேர்வாகி மருத்துவக்கல்லூரிகளில் படித்து வருகின்றனர் என்று குறிப்பிடத்தக்கது.
மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கீரமங்கலம் பள்ளி உள்பட புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மொத்தம் 23 பேருக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. அவர்களில், 20 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பையும், மற்ற 3 பேர் பல் மருத்துவ படிப்பையும் தேர்வு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.