தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசால் கடந்த 2009ம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. இதையடுத்து இந்த திட்டம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய அரசின் சுகாதாரத்துறையுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின்படி ஆண்டு வருமானம் ரூ. 1.20 லட்சம் வரை உள்ள குடும்பத்தினர் ரூ. 5 லட்சம் வரை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். சுமார் 1.57 கோடி குடும்பங்கள் பயன்பெறுகின்றனர். பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1027 சிகிச்சை முறைகளுக்கும், 154 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 38 அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் இந்த காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம். குறிப்பாக, குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினருக்கும் இதய, நரம்பு, சிறுநீரக நோய்கள், அறுவை சிகிச்சைகளுக்கு உதவி பெறலாம். அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் குறிப்பிட்ட நோய்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு குடும்பத்திற்க்கு, ஒரு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரையிலான மதிப்புள்ள சிகிச்சைகள் பெறலாம்.





இதனை தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில், தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதமரின் ஆரோக்கியத் திட்டத்தின் 4-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அறுவைச் சிகிச்சை பெற்ற பயனாளிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் கலந்துகொண்டு பரிசுகளையும், புதிதாக மருத்துவக் காப்பீட்டுத் திட்ட உறுப்பினா்களுக்கு காப்பீட்டு அட்டைகளையும், சிறப்பாக செயல்பட்ட மருத்துவமனை மற்றும் பணியாளா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பரிசு மற்றும் கேடயங்களையும் வழங்கி பாராட்டினார். அப்போது அவர் பேசுகையில், திருச்சி மாவட்டத்தில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 11 அரசு மருத்துவமனைகள் மற்றும் 53 தனியாா் மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் 2021–-22 ஆம் ஆண்டில் 23,499 பயனாளிகளுக்கு ரூ.43.38 கோடி மதிப்பில் மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.




இத்திட்டத்தில் மொத்தம் 1,450 மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சைகளும் 38 நோய் பரிசோதனைகளும், அதனோடு தொடா்புடைய 154 தொடா் சிகிச்சைகளும் 8 உயா் அறுவை ச்சிகிச்சைகளும் சோ்க்கப்பட்டுள்ளன. ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கும் கீழ் உள்ளவா்கள் காப்பீட்டுத் திட்ட விண்ணப்பப் படிவத்தில் சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலரிடம் கையொப்பம் பெற்று, குடும்ப அட்டை மற்றும் ஆதாா் அட்டையைக் காண்பித்து பயன்பெறலாம் என்றார். மேலும் வருமான வரம்பு இல்லாத விதவைகள், முதியோா் உதவித்தொகை பெறுபவா்கள், முகாம் வாழ் இலங்கைத் தமிழா்கள், முகாம்களுக்கு வெளியே வசிக்கும் பதிவு செய்த இலங்கைத் தமிழா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோா் அதற்குண்டான அடையாள அட்டையைக் காண்பித்து, கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட புகைப்படம் எடுக்கும் மையத்தில் காப்பீட்டு அட்டை பெற்றுக்கொள்ளலாம். மாவட்டத்தில் இதுவரை 5,00,679 குடும்பத்தினா் இத்திட்டத்தில் உறுப்பினா்களாகப் பதிவு செய்துள்ளனா் என்றாா்.