புதுக்கோட்டை மாவட்டம், காரையூர் அருகே இடையாத்தூர் பொன்மாசிலிங்கம் அய்யனார் கோவிலில் சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த அப்பகுதி கிராமத்தினர் முடிவு செய்தனர். அதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அதற்கான பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து இன்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது. முதலில் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் காரையூர் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன் தலைமையிலான மருத்துவ குழுவினர் மாடுபிடி வீரர்களை பரிசோதனை செய்தனர். இதில் 228 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு களத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து ஜல்லிக்கட்டை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, பொன்னமராவதி தாசில்தார் பிரகாஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதையடுத்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் 228 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து வந்த காளைகளை போட்டிப்போட்டு அடக்கினர். அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.




மேலும் சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. இதில் திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த 630 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 6 பேர், பார்வையாளர்கள் 8 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 7 பேர் உள்பட 21 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினர் சார்பில், கட்டில், டி.வி., சைக்கிள், மிக்சி, டைனிங் டேபிள், குக்கர், சில்வர் பாத்திரங்கள், ரொக்கப் பரிசு உள்பட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், சிறந்த காளைக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டை துணை வட்டாட்சியர்கள் சேகர், இஸ்மாயில், திலகவதி மற்றும் திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், காரையூர், பொன்னமராவதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கண்டு களித்தனர். புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் கண்ணன், இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு காயத்திரி, அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை இடையாத்தூர் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.