அரியலூர் மாவட்டம், பெரியவளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலைமணி. இவரது மனைவி மலர்விழி (வயது 29). நேற்று முன்தினம் காலை இவரும், அதே பகுதியைச் சேர்ந்த தண்டபாணி மனைவி கண்ணகியும் (40) சமையல் செய்வதற்காக, அருகில் உள்ள வயலுக்கு காளான் பறிப்பதற்காக சைக்கிளில் சென்றுள்ளனர்.


நீண்ட நேரமாகியும் மலர்விழி வீட்டிற்கு திரும்பாததால் கலைமணி மற்றும் ஊரிலுள்ள இளைஞர்கள் வயலுக்கு சென்று பார்த்தனர். அப்போது மலர்விழியும், கண்ணகியும் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து கலைமணி அளித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மலர்விழி, கண்ணகி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதனைத்தொடர்ந்து, மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மலர்விழி மற்றும் கண்ணகி ஆகியோர் கழுத்தில் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததால், நகைக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.




மேலும் இந்த சம்பவத்தில் துப்பு துலக்கி குற்றவாளிகளை பிடிக்க அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் ஆலோசனையின்படி, ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் கொண்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், நேற்று மலர்விழி, கண்ணகி ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், கண்ணகியின் செல்போனை காணவில்லை என்பதும், அவரது செல்போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, கண்ணகியின் செல்போன் மூலம் போன் செய்யப்பட்ட நம்பர்களை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் யார், யாருடன் பேசினார் என்பது பற்றி முதல்கட்ட விசாரணையை தொடங்கினர்.




இதில் சம்பவம் நடந்த பகுதியில் இருந்து கண்ணகி 3 பேருக்கு போன் செய்தது தெரியவந்தது. அதில் முதலாவதாக அவரது மகன் விக்னேஸ்வரனுக்கும், இரண்டாவதாக தனது கொளுந்தனாரின் மனைவி செல்விக்கும் போன் செய்துள்ளார். ஆனால் அவர்கள் போனை எடுக்கவில்லை. இதையடுத்து தனது அண்ணன் மகனுக்கு போன் செய்துள்ளார்.


அவர் போனை எடுத்து பேசியபோது, கண்ணகி பேசியது ஒன்றும் புரியாததால், இணைப்பை துண்டித்துவிட்டு, மீண்டும் கண்ணகியின் செல்போனுக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது, என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனால் கண்ணகி உதவி கேட்பதற்காக அவர்களிடம் பேச முயன்றாரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கொலை செய்யப்பட்ட பெண்கள் அரிவாளால் வெட்டப்பட்டது மட்டுமின்றி, மலர்விழியின் உடல் உறுப்பு பகுதியில் சுளுக்கியாலும் குத்தப்பட்டுள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுபோன்ற பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் விசாரணையில் வெளியானதால், போலீசார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். இதில் சம்பவம் நடந்த பகுதி வழியாக அணில் பிடிக்க வந்தவர்களையும், மேலும் சிலரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் கழுவந்தோண்டி பகுதியை சேர்ந்த 4 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.