புதுக்கோட்டை மாவட்டம், கடியாபட்டி குறுந்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 48). இவர், வேலைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார். பின்னர் 3 ஆண்டுகளுக்கு பிறகு அவர் சொந்த ஊருக்கு திரும்பினார். இதையடுத்து அவரை திருச்சி விமான நிலையத்திலிருந்து அழைத்து வருவதற்காக ஒரு வாடகை காரில் அவரது மனைவி சுபஸ்ரீ (38), மகன் சஞ்சய் குமார் (5) மற்றும் டிரைவர் பாண்டி கண்ணன் (42) ஆகியோர் சென்றிருந்தனர். பின்னர் வெள்ளைச்சாமியை அழைத்து கொண்டு காரில் வந்து கொண்டிருந்தார். கீரனூர் புறவழிச்சாலையில் உள்ள ஒரு ஓட்டல் முன்பாக காரை நிறுத்திவிட்டு சாப்பிட்டனர். பின்னர் அவர்கள் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு காரில் ஏறி கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்து இறங்கிய 4 பேரில் 2 பேர் பட்டாக்கத்தியால் வெள்ளைச்சாமியை தலை மற்றும் வயிற்று பகுதியில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். மேலும் மோட்டார் சைக்கிளில் வந்தவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெள்ளைச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக கீரனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.




இதனை தொடர்ந்து போலீசார் செல்போன் டவர் சிக்னல் மூலம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது வெள்ளைச்சாமியை வெட்டிய கும்பல் சென்ற கார் துவரங்குறிச்சி பகுதியில் சென்று கொண்டிருந்தது. இதையடுத்து அங்கு துவரங்குறிச்சி போலீசார் வாகன சோதனை நடத்தினர். இதையறிந்த மர்மகும்பல் மாற்றுப்பாதையில் சென்றபோது, அந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் காரில் இருந்த 2 பேர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். மேலும் காரில் இருந்த 2 பேரை துவரங்குறிச்சி போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காரில் வந்தவர்கள் கீரனூரிலிருந்து வந்ததாக தெரிந்ததையடுத்து உடனடியாக கீரனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து கீரனூர் போலீசார் துவரங்குறிச்சி சென்று அங்கிருந்த 2 பேரையும் கைது செய்து கீரனூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் ஊரை சேர்ந்த அழகர்சாமி மகன் அழகு பாண்டி (26), முத்துப்பாண்டி மகன் மதன்ராஜ் (20) என்பதும், அவர்கள் இருவரும் கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.