புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் என எஸ்பி வந்திதா பாண்டே தெரிவித்துள்ளார். தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து, தமிழகம் முழுவதும் போதைப் பொருளுக்கு எதிரான வேட்டையை போலீசார் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்பியாக வந்திதா பாண்டே பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் எந்த பகுதியிலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை நடந்தால் உடனே பொதுமக்கள் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என தெரிவித்தனர்.




மேலும் தகவல் தருபவர்களின் ரகசியம் காக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். முக்கியமாக, கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை குறித்து மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு புகார் அளிக்கலாம் அல்லது மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டேவின் தொலைபேசி எண்ணான 94899-46674 என்ற எண்ணிற்கும் தகவல் தெரிவிக்காலம். மேலும், புகார் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும். பொதுமக்கள் அச்சமின்றி புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், நகர் பகுதிகளில் சந்தேகப்படும்படி யாரேனும் சுற்றி திரிந்தால் புகார் அளிக்கலாம். புகார் குறித்து தனிப்படைக்கு தகவல் தெரிவித்து, ரகசிய கண்காணிப்பு நடத்தி போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட போலீசார் திட்டமிட்டுள்ளனர். 




 


இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் மற்றும் போதை ஊசி விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக டி.ஜி.பி. உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையில் கஞ்சா வழக்கில் சமீபத்தில் 15 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 15 கிலோ வரை கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கடந்த 12-ந் தேதி முதல் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கஞ்சா விற்பனைக்கு எதிராக ஆபரேஷன் 3.0 நடவடிக்கையில் தொடர்ந்து தனிப்படையினர் அதிரடி வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டையில் கடந்த 12-ந் தேதி திருச்சியை சேர்ந்த ரவுடி இளவரசன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடையவர்கள் அனைவரும் திருச்சி, சிவகங்கை, திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இருப்பினும் புதுக்கோட்டையில் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை தடுக்க ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவிட்டார். இதில் குற்றச்சம்பவங்களை குறைக்கும் நோக்கில் 19 ரவுடிகளை போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டதாக காவல்துறை  வட்டாரத்தில் தகவல் தெரிவித்தனர். மேலும் தொடர் குற்றசம்பவங்களில் ஈடுபடுவோர்கள் மீது சட்டரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.