திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் குழந்தைகளுக்கான ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தைகள் முதல் 4 வயது குழந்தைகள் வரை மொத்தம் 34 குழந்தைகள் இந்த காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் முறை தவறி பிறந்ததால் கேட்பாரற்றும், அனாதையாகவும் வீசப்பட்ட பச்சிளம் குழந்தைகளை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர் மீட்டு இந்த காப்பகத்தில் தான் ஒப்படைப்பார்கள்.

 

அந்த குழந்தைகள் தத்து கொடுக்கும் வரை இங்குதான் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு பால் குடித்துவிட்டு தூங்கும் போது 6 பெண் குழந்தைகள், 4 ஆண் குழந்தைகள் என 10 குழந்தைகளுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதில் 2 குழந்தைகளுக்கு மூச்சுத்திணறலும், மற்ற குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கும் இருந்தது. இந்த குழந்தைகள் அனைத்தும் 1 மாதம் முதல் 4 மாதம் வரை உள்ள குழந்தைகள். இதைத்தொடர்ந்து அவர்கள் குழந்தைகளை ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தைகள் அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு தீவிர குழந்தைகள் சிகிச்சை பிரிவில் 2 குழந்தைகளும், பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் மற்ற குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 



 

மேலும் இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை டீன் நேருவிடம் கேட்டபோது, பருவநிலை மாற்றம் காரணமாகவும், ஒவ்வாமை காரணமாகவும் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது குழந்தைகள் அனைவரும் நலமாக உள்ளனர் என்றார். மேலும் இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் சம்பந்தப்பட்ட காப்பகத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே இந்த தொண்டு நிறுவனத்தில் பராமரிக்கப்பட்ட பவதாரணி என்ற நான்கு மாத பச்சிளம் குழந்தை, கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவு ஒவ்வாமை காரணமாக, திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மீண்டும் 10 குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஒரே நேரத்தில் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.