ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத் திருவிழா நேற்று தொடங்கியது. இந்த திருவிழா வருகிற மார்ச் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது. தெப்பத்திருவிழாவின் முதல் நாளான நேற்று நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து தோளுக்கினியான் பல்லக்கில் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு ரெங்கவிலாஸ் மண்டபத்திற்கு காலை 8.15 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்தவாறு நம்பொருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் மாலை 6.30 மணிக்கு ஹம்ச வாகனத்தில் புறப்பட்டு உள்வீதிகளில் வலம் வந்து இரவு 7.45 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைந்தார். வாகன மண்டபத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். தெப்பத்திருவிழாவின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை ஹனுமந்த வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மூன்றாம் நாளான நேற்று நம்பெருமாள் கற்பகவிருட்ச வாகனத்தில் உள்வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும் 4-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெள்ளி கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி காலை 6.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு உள்வீதிகளில் வலம் வந்து வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 9 மணிக்கு ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கிருந்து மாலை 6 மணிக்கு நம்பெருமாள் வெள்ளி கருட வாகனத்தில் புறப்பட்டு உள்திருவீதிகளில் வலம் வந்து இரவு 8.30 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைவார். பின்னர் அங்கிருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.


 

தெப்பத்திருவிழா: 

 

முக்கிய திருநாளான தெப்பத்திருவிழா 8-ம் நாளான 2-ந் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 3 மணியளவில் மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார். 9-ம் திருநாளான 3-ந் தேதி காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி பகல் 2 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். பகல் 3 மணி முதல் மாலை 5 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் இரவு 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்தக்காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் மாசி தெப்பத்திருவிழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.



 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.