பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தன்ராசு(வயது 59). இவரது மனைவி கலைவாணி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் கார்த்திகேயன், டாக்டராக உள்ளார். இளைய மகன் என்ஜினீயராக உள்ளார். தன்ராசு புதுக்கோட்டை மாவட்ட நகர ஊரமைப்புத்துறை இணை இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவர் தஞ்சை மற்றும் சிவகங்கை மாவட்ட இணை இயக்குனராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். அடுத்த மாதம் தன்ராசு ஓய்வு பெற இருக்கிறார். இந்த நிலையில் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக கூறி, பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனைத்தொடர்ந்து தன்ராசு மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் குவித்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சந்திரசேகர் தலைமையில் பல குழுக்களாக பிரிந்து, தன்ராசு மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரில் உள்ள வீடுகள் மற்றும் நிறுவனங்களில் கடந்த 26 ஆம் தேதி  காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை அதிரடி சோதனை நடத்தபட்டது. இதில் அரியலூரில் மேல அக்ரஹாரத்தில் உள்ள அவரது வீடு, ஜெயங்கொண்டம் சாலையில் உள்ள அவரது மகன் கார்த்திகேயனுக்கு சொந்தமான ஸ்கேன் மையம், அரியலூர் புறவழிச்சாலையில் உள்ள திருமண மண்டபம் ஆகிய இடங்களில் சோதனை செய்யப்பட்டது.




மேலும் ஆலத்தூர் தாலுகா தொண்டப்பாடி கிராமத்தில் தன்ராசுவின் மனைவி கலைவாணி பெயரில் 3 ஏக்கர் விவசாய நிலத்தில் உள்ள வீட்டில், பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி தலைமையில் 4 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் குழுவினர் சோதனை செய்தனர். கூத்தூரில் கலைவாணி பெயரிலும், தன்ராசு பெயரிலும் 17.5 சென்ட் நிலத்தில் உள்ள வீடுகளில் கரூர் இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தலைமையில் 4 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் குழுவினர் சோதனை நடத்தினர். இதேபோல் கூத்தூரில் கலைவாணி பெயரில் ஒரு ஏக்கர் நிலத்தில் உள்ள வீட்டில் தஞ்சாவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி தலைமையில் 3 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் சோதனை நடத்தினர். திடீரென்று ஒரே நேரத்தில் அரியலூர் நகரிலும், பெரம்பலூர் மாவட்டம் கூத்தூர் மற்றும் தொண்டப்பாடியிலும் 6 இடங்களில் நடந்த இந்த சோதனையில் மொத்தம் 36 போலீசார் ஈடுபட்டனர்.  இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்த சோதனையில்  கணக்கில் காட்டப்படாத ரூ.8 லட்சம், 1¼ கிலோ தங்க நகைகள், 8 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தகவல் தெரிவித்தனர். ஆனால் இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண