திருச்சி விமான நிலையத்தில் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கம் விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தங்கம் கடத்தல் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இவற்றை தடுக்கும் முயற்சியில் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கடந்த மூன்று மாதத்தில் மட்டும் அதிக அளவில் தங்கம் மற்றும் போதைப்பொருள்கள் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும் இதுபோன்ற தங்கம் கடத்தல், போதைப்பொருட்கள் கடத்துதல் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இவற்றை கட்டுபடுத்த தீவிர நடவடிக்கைகளை சுங்கதுறை அதிகாரிகள் மேற்க்கொண்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் 24 மணி நேரமும் அனைத்து விமானங்களில் இருந்து வரும் பொருள்களையும் முழுமையாக சோதனை செய்யவும், பயணிகளின் உடைமைகளை முழுமையாக சோதனை செய்த பிறகே அவர்களை செல்ல அனுமதிக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர். அதன்படி தொடர்ந்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர், இந்த நிலையில் பயணிகளின் உடைமைகளையும் மற்றும் பொருட்களையும் சோதனை செய்யும்போது அதில் ஒரு கோடி மதிப்புடைய போதைப் பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா போன்ற வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. மேலும் திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இந்நிலையில் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களோடு கொரியர் மூலம் போதைப் பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று இரவு திருச்சியில் இருந்து வெளிநாட்டிற்கு கொரியர் அனுப்பி வந்த நபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் சுமார் 10 கிலோ எடை கொண்ட கவர் ஒன்றை கொரியர் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்ப வந்தது தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் திருச்சி ஜீயபுரம் அருகே உள்ள எட்டரை கோப்பு பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (32) என்பதும், அவர் கொண்டு வந்த பார்சலை பிரித்து சோதனை செய்தபோது அதில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை வெளிநாட்டுக்கு கடத்த இருந்ததும் தெரியவந்தது.
அதனை தொடர்ந்து அவரை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் எட்டரைப் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சோதனை நடத்தப்பட்டது. பின்னர் அந்த வாலிபரை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி முசிறி கிளை சிறையில் அடைத்தனர். திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வருவது மட்டுமே இருந்த நிலையில், தற்பொழுது போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் கூடுதல் அதிகாரிகளை பணியில் நியமித்து தீவிர சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள் இதுபோன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.