தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றதேர்தலில் பெரும்பான்மையுடன் திமுக வெற்றிபெற்றது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரும், திமுக தலைவருமான ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பது உறுதியான நிலையில் மே 7 ம் தேதி அவரது பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. கொரோனா விதிகள் அமலில் இருப்பதால் பெரிய அளவில் விழா நடத்த முடியாது. இருப்பினும் கவர்னர் மாளிகையில் எளிய நிகழ்ச்சி மூலம் ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.




ஸ்டாலினுடன் அவரது அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது. இந்நிலையில் திமுக சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அதில் பங்கேற்குமாறு ஏற்கனவே ஸ்டாலின் அழைப்புவிடுத்துள்ள நிலையில், முறைப்படி சட்டமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலோடு முதல்வர் தேர்வு செய்யப்பட உள்ளார். ஏற்கனவே ஸ்டாலின் தான் முதல்வர் வேட்பாளர் என்றாலும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒப்புதல், விதிகளின் படி முக்கியமானது என்பதால் அதற்காக இந்த கூட்டம் நடைபெறுகிறது. 


அதுமட்டுமின்றி, ஸ்டாலினின் அமைச்சரவையில் யாருக்கெல்லாம் பொறுப்பு வழங்கப்படப் போகிறது என்கிற பேச்சு பரவலாக உள்ளது. எனவே அதற்கான ஆலோசனையும் இன்றைய கூட்டத்தில் நடைபெறலாம். நிறைய சீனியர் முன்னாள் அமைச்சர்களுக்கு தேர்தலில் போட்டியிட ஸ்டாலின் வாய்ப்பளித்திருந்தார். அதில் பெரும்பாலானோர் வெற்றியும் பெற்றுள்ளனர். 




தேர்தலில் வாய்ப்பளித்ததைப் போன்றே, அமைச்சரவையிலும் சீனியர்களுக்கு முக்கியத்துவம் தரப்படலாம் என தெரிகிறது. குறிப்பாக துரை முருகன், பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் ஏற்கனவே பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. சீனியர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்காமல், புதுமுகங்களுக்கும், அந்தந்த துறை சார்ந்த திறனாளர்களுக்கும் அமைச்சரவையில் இடம் தரலாம் என திமுக தலைமைக்கு ஐடியா இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. 


குறிப்பாக இம்முறை புதிதாக தேர்தல் களத்தை சந்தித்து வெற்றி பெற்ற இளைஞர்கள் சிலருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் . அதுவும் முக்கியத்துறைகளில் வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறது அறிவாலய வட்டாரங்கள். ஏற்கனவே அமைச்சரவை பட்டியல் தயாராகிவிட்டதாகவும், இவர் இவர் தான் அமைச்சர் என்றெல்லாம் பரவலான பேச்சு பொதுவெளியில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இன்றைய கூட்டத்தில் அதற்கு முடிவு கிடைக்கலாம். 


அமைச்சர்கள் மட்டுமின்றி, சபாநாயகர், கொறாடா போன்ற முக்கிய பொறுப்புகள் எல்லாம் ஒதுக்கப்பட வேண்டியிருப்பதால், அது பற்றிய ஆலோசனையும், தேர்வும் கூட இன்றைய கூட்டத்தில் இடம் பெறலாம். திமுக மொத்தமாக வெற்றியை  அள்ளிய மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்க வாய்ப்புள்ளது. 


அதே நேரத்தில் குறைவாக தொகுதிகள் பெற்ற இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தும்படியாக அங்கு வெற்றி பெற்றவர்களுக்கும் கூடுதல்  பொறுப்புகள் வழங்கப்படலாம். இவை அனைத்திற்கும் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் முடிவு கிடைக்கும்.