திருவாரூர் மாவட்டத்தில் நான்கு நகராட்சி ஏழு பேரூராட்சிகள் 10 ஊராட்சி ஒன்றியங்கள் 534 ஊராட்சிகள் என 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் விவசாயமும் விவசாய தொழிலாளர்களும் நிறைந்த மாவட்டம் இந்தப் பகுதியில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கடந்த ஆட்சிக் காலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு உறுப்பு கலை கல்லூரிகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில் கல்லூரிகள் தொடங்கப்பட்ட நிலையில் கல்லூரிகளுக்கு தேவையான கட்டிட வசதி பேராசிரியர்கள் வசதி உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என பல ஆண்டுகளாக மாணவர்களும் மாணவர்களுடைய பெற்றோர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியில் அரசு உறுப்பு கலைக்கல்லூரி அறிவிக்கப்பட்டு கட்டிட வசதி இல்லாமல் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் கல்லூரி வகுப்புகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த பல நாட்களாக புதிய கட்டிட வசதி கொண்டு தர வேண்டும் குடவாசல் உறுப்புக்களைக் கல்லூரியை குடவாசல் பகுதியில் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடவாசலில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் இல்லாமல் குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டிடத்தில் இந்த கல்லூரிக்கான வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரிக்கு நிரந்தரம் நிரந்தர கட்டிடம் கட்டித் தர வேண்டும் என மாணவ, மாணவிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இதுகுறித்து நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் குடவாசல் அரசு கலை கல்லூரியை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு முயற்சி எடுப்பதாகவும் அதற்கு நிரந்தர கட்டிடம் கட்டித் தர வேண்டும் எனவும் சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த நிலையில் கல்லூரிக்கு நிரந்தர இடம் தேர்வு செய்யவும், கல்லூரிக்காக தற்போது கல்லூரியில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் போக்குவரத்து வசதி உள்ளிட்ட வசதிகள் குறைவாக இருப்பதால் குடவாசல் ஒன்றியத்திற்குள் ஒரு இடத்தை தேர்வு செய்ய வேண்டும் எனவும்,தற்போது கல்லூரி செயல்பட்டு வரும் தற்காலிக இடத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி இன்று மாணவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரியில் இருந்து பேரணியாக வட்டாட்சியர் அலுவலகத்தை நோக்கி வந்தனர்.அவர்களை காவல்துறையினர் வட்டாட்சியர் அலுவலக வாயிலில் தடுத்து நிறுத்தினர்.இதனால் மாணவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து ஆத்திரமடைந்த மாணவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தின் சுற்று சுவர் மீது ஏறி குதித்து வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.இதனால் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து குடவாசல் வட்டாட்சியர் மாணவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.இந்த சமாதான பேச்சுவார்த்தை நன்னிலம் துணை காவல் கண்காணிப்பாளர் வட்டாட்சியர் குடவாசல் காவல் ஆய்வாளர் மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.அதில் மாணவ மாணவிகள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக வட்டாட்சியரிடம் அளித்துள்ளனர்.இந்த கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என வட்டாட்சியர் எழுத்துப் பூர்வமாக உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவ மாணவிகள் கலைந்து சென்றனர்.