திருவண்ணாமலை பகுதியில் 11 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் 40 வயது கூலி தொழிலாளி. இவருக்கு மனைவியும் மற்றும் 11 வயது மகள் உள்ளனர். இந்த சிறுமி அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் 2018-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறுமிக்கு பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது சிறுமியின் தந்தை குடிபோதையில் வந்து தன் மகள் என்றும் பாராமல் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதேபோன்று சிறுமியை பலமுறை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிறுமியின் தாய் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து கணவரிடம் தட்டி கேட்டார். அப்போது மனைவியை கணவர் அடித்து துன்புறுத்தியுள்ளார். இது குறித்து உடனடியாக குழந்தைகள் நல அலுவலருக்கு சிறுமியின் தாய் தகவல் தெரிவித்தார்.
மகளை பாலியல் வன்கொடுமை செய்த கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
உடனடியாக இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் நலக்குழுவினர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 2018-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி புகார் அளித்தனர். இந்த புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது வழக்கை விசாரித்து நீதிபதி பார்த்தசாரதி மகளை பாலியல் வன்கொடுமை செய்த கூலி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் இழப்பிடு வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்தார்.
பாலியல் வன்முறை, குழந்தைத் திருமணம் புகாரளிக்கலாம்
இந்த வழக்கில் அரசு சிறப்பு வக்கீலாக புவனேஸ்வரி ஆஜரானார். இதனை அடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியை காவல்துறையினர் அழைத்துச் சென்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புகார்கள் குறித்து மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தின் கீழ் 1098 சைல்ட்-லைன் உதவி எண் சேவை செயல்பட்டு வருகிறது. இந்தச் சேவை இந்தியா முழுவதும் உள்ள 602 மாவட்டங்கள் மற்றும் 144 ரயில்வே நிலையங்களில் செயல்பட்டு வருகிறது. இந்தச் சேவை எண் மூலம், 0 முதல் 18 வயதான குழந்தைகளுக்கான மருத்துவ உதவி, குழந்தைக் கடத்தல், குழந்தைத் திருமணம், வீட்டைவிட்டு வெளியேறிய குழந்தைகள், குழந்தைகள் படிப்பு, பாலியல் வன்முறை, குழந்தைத் தொழிலாளர்கள் என குழந்தைகளுக்கு எதிரான அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் புகார் தெரிவிக்கலாம். இந்தச் சேவை 24 x 7 மணி நேரமும் வழங்கப்பட்டுவருகிறது.