திருவண்ணாமலை: சாலையோரம் காய்கறிகள் வியாபாரம் செய்யும் வியாபாரிகள், உழவர் சந்தையில் வந்து வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உழவர் சந்தை வியாபாரிகள் மனு அளித்தனர்.


திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பின்புறம் கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு உழவர் சந்தை திறக்கப்பட்டது. இந்த உழவர் சந்தையில் திருவண்ணாமலை, வேங்கிக்கால், துரிஞ்சாபுரம், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைவிக்கும் கத்திரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறி வகைகளையும், முருங்கைக்கீரை, சிறுகீரை, அகத்திக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை உள்ளிட்ட கீரை வகைகளையும் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளாக உழவர் சந்தையில் நல்லபடியாக வியாபாரம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் உழவர் சந்தையில் விவசாயிகள் வியாபாரம் செய்யாமல் இருந்து வந்தனர். அப்போது விவசாயிகள் காய்கறிகளை உழவர் சந்தையில் விற்காமல் சாலையோரங்களில் விற்பனை செய்தனர்.


 





அரசு ஊழியர்கள் உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்குவதில்லை


தற்போது வேலூர் சாலையில் சாலையோரங்களில் 80-க்கும்  மேற்பட்ட தற்காலிக கடைகளும், காந்திநகர் புறவழிச் சாலையில் சாலையோரங்களில் 30-க்கும் மேற்பட்ட  கடைகளும், வேட்டவலம் சாலையில் சாலையோரம் 20-க்கும் மேற்பட்ட  தற்காலிக காய்கறி கடைகளும், தண்டராம்பட்டு சாலையில் 20-க்கும் மேற்பட்ட கடைகளும்  செயல்பட்டு வருகிறது. குறிப்பாக வேங்கிக்கால் பஞ்சாயத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் அதிக அளவு வசித்து வருவதால் இவர்கள் அனைவரும் வேலூர் சாலையில் உள்ள தற்காலிக சாலையோர காய்கறி கடைகளில் பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் யாரும் உழவர் சந்தையில் காய்கறிகள் வாங்குவதில்லை. இதனால் உழவர் சந்தையில் இருக்கும் விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை விற்பனை செய்ய முடியாமல் சிரமத்திற்கு தள்ளப்பட்டனர்.


 




 


உழவர் சந்தையில் வியாபாரம் செய்யும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு


அதனை தொடர்ந்து உழவர் சந்தையில் வியாபாரம் செய்யும் விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் சாலையோரங்களில் காய்கறிகளை விற்பனை செய்யும் வியாபாரிகள் அனைவரையும் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , அனைவருக்கும் வியாபாரம் நடக்க மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்யும் விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கல்வி உதவித் தொகை வங்கிக் கடனுதவி, முதியோர் உதவித் தொகை ,வீட்டு மனைப்பட்டா, சாதிச்சான்று, வேலை வாய்ப்பு, விதவை உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் உபகரணங்கள்,சாலை வசதிகள், பிரதான் மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், வேளாண்மை துறை சார்ந்த பயிர்க்கடன்கள், புதிய நீர்தேக்க தொட்டி அமைத்து தருதல், தாட்கோ மூலம், கடனுதவி, கூட்டுறவு சங்ககளில் பயிர் கடன்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 585 மனுக்கள் பெறப்பட்டது.