திருவண்ணாமலை மாவட்டம் கலரா பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் வயது (34). இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சாந்தி இந்த தம்பதியருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். விவசாயி ராமகிருஷ்ணனுக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து பணம் பெறுவதற்காக முயற்சி செய்துள்ளார். வங்கியில் நிலத்தை வைத்து பணம் பெறவேண்டும் என்றால் சிட்ட அடங்கல் வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு விவசாயி என்ன செய்வது என்று தெரியாமல் கிராமத்தில் உள்ள நண்பர்களிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு அவருடைய நண்பர்கள் கிராம நிர்வாக அலுவரிடம் தான் பெற முடியும் என தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து விவசாயி ராமகிருஷ்ணன் தேவனாம்பட்டு  உள்ள கிராம நிர்வாக  அலுவலகத்திற்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலராக உள்ள காந்தி என்பவரிடம் என்னுடைய விவசாய நிலத்திற்கு சிட்டா அடங்கல் வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் காந்தி தன்னை வந்து பாருங்கள் என கூறியதாக கூறப்படுகிறது. 


பின்னர் மறுநாள் மீண்டும்  தேவனாம்பட்டு கிராம அலுவலர் காந்தியிடம் சிட்டா அடங்கல் கேட்டுள்ளார். நீ  இரண்டு நாட்கள் கழித்து வாருங்கள் என தெரிவித்துள்ளார். மிகவும் வறுமையால் இருந்த விவசாயி ராமகிருஷ்ணன் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார். பின்னர் வங்கியில் இருந்து ஆவணங்கள் தயார் செய்து விட்டாயா என விவசாயி ராமகிருஷ்ணனிடம் கேட்டுள்ளனர்.  உடனடியாக கிராம அலுவலரிடம் சென்று சிட்டா அடங்கல் கேட்டுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் தங்களுக்கு கொடுக்க 2 நாட்கள்  ஆகும் என தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக தன்னை அலைக்கழித்து வருகிறாய் என கேட்டு கிராம அலுவலரிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்துள்ளனர்.  விவசாயி நான்  சென்று 2 நாட்கள் கழித்து வருவேன், எனக்கு சிட்டா அடங்கல் வேண்டும் தெரிவித்து கோபத்துடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். பிறகு 2 நாட்கள் கழித்து நேற்று தேவானந்தல் கிராம அலுவலர் காந்தியிடம் சென்று  சிட்டா அடங்கலை கேட்டுள்ளார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் எந்தவித பதிலையும் அளிக்காமல் இருந்துள்ளார். ஆத்திரமடைந்த விவசாயி ராமகிருஷ்ணன் கிராம நிர்வாக அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலர் விவசாயிக்கு அடங்கல் தரமுடியாது உன்னால் என்ன செய்யமுடியுமோ செய்துகொள்ள என தெரிவித்ததாக கூறப்படுகிறது.


ஆத்திரமடைந்த விவசாயி தனது இருசக்கர வாகனத்தில் வைத்து இருந்த பெட்ரோலை எடுத்து கிராம அலுவகம் முன்பே தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளித்துள்ளார். உடல்முழுவதும் தீ பரவி தாங்க முடியாமல் கத்தியுள்ளார். அருகில் யாரும் இல்லாததால் கீழே வீழ்ந்து தனது உடலில் பரவிய தீயை கீழே உருண்டு அணைத்துள்ளார். பின்னர் இவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் விவசாயி ராமகிருஷ்ணனை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் மருத்துவர்கள் விவசாயி ராமகிருஷ்ணனுக்கு சிகிச்சை அளித்தனர். 58 சதவீதம் தீயால் காயம் ஏற்பட்டுள்ளதால் மேல்சிகிச்சைக்காக வேலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கிராம நிர்வாக அலுவலர் தலைமறைவாக உள்ளார்.  இதனை எல்லாம் கிராம நிர்வாக அலுவலர் அவருடைய தொலைபேசியில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.