திருவண்ணாமலை (cheyyar News)
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆற்காடு சாலையில் இயங்கி வருகிறது, அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி இந்த கல்லூரியில் 8,500 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இரண்டு பிரிவுகளாக காலை மாலை என தனித்தனி ஷிப்ட்கள் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிக்கு வந்தவாசி, போளூர், ஆரணி, தேவிகாபுரம், தூசி, கண்ணமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மாணவர்கள் கல்லூரிக்கு வருகின்றனர். இக்கல்லூரியில் பெண்களுக்கு என தனியாக கழிப்பறைகள் உள்ளது. இந்த கழிவறைகள் இருந்தாலும் 4500 மாணவிகள் பயின்று வரும் கல்லூரியில் போதுமான கழிப்பறைகள் இல்லை. இருக்கக்கூடிய கழிப்பறைகள் சுகாதாரமற்று பராமரிப்பு இல்லாமல் காணப்படுகிறது. மேலும் கழிப்பறை சுற்றிலும் புதர்கள் மண்டி இருப்பதால் மாணவிகள் கழிப்பறை செல்வதற்கு அச்சத்துடன் சென்று வந்துள்ளனர்.
பெண்கள் கழிப்பறையில் பாம்புகள் கூட்டம்
இதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. இந்நிலையில் அரசு கலைக் கல்லூரி முதல்வர் அறை அருகே உள்ள பெண்கள் கழிப்பறையில் கடந்த சில நாட்களாக பாம்புகள் கூட்டம் கூட்டமாக காணப்பட்டதால் கல்லூரி மாணவிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடி உள்ளனர். பாம்புகளை கல்லூரி மாணவி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அனுப்பியுள்ளார். இதனால் கழிப்பறையில் பாம்பு உலாவும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் சார்பில் இந்த கழிப்பறையில் பாம்புகள் உலா வருவதால் இந்த கழிப்பறையை பயன்படுத்த வேண்டாம் என்று எழுதி கழிப்பறை சுவற்றில் ஒட்டியுள்ளனர்.
கழிவறையை தூய்மையாக வைக்க மாணவர்கள் கோரிக்கை
இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறையினர் உடனடியாக கழிப்பறையை சுற்றி முட்பதர்கள் மண்டி இருப்பதால் இவைகளை அகற்றி கழிப்பறைகளை தூய்மை செய்து சுகாதாரமான கழிப்பறைகளை உருவாக்க வேண்டும் என்பது கல்லூரி மாணவிகளின் எதிர்பார்ப்பாகும். மேலும் போதுமான தூய்மை பணியாளர்களை நியமித்து கழிப்பறைகளை பராமரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் கேட்டபோது பெண்கள் கழிப்பறையில் பாம்புகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று தீயணைப்பு துறை மூலமாக ஒரு பாம்பை பிடித்து சென்றனர் என்றும் தெரிவித்தார். மேலும் கழிவறை தூய்மைப்படுத்தவும் சுற்றுப்புற இடங்களை தூய்மைப்படுத்துவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். சுமார் 8,500 மாணவ மாணவிகள் பயின்று வரும் அரசு கலைக்கல்லூரி பெண்கள் கழிப்பறைக்குள் பாம்புகள் கூட்டம் கூட்டமாக திரியும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதால் இந்த வீடியோவை கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.