திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்தலோ விற்பனை செய்தலோ பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றி அபராதம் விதிப்பதோடு கடையை மூடி சீல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு 25.08.2018 தேதியிட்ட ஆணை 84-ன் படி கீழ்க்கண்ட ஒரு முறை பயன்பாடுள்ள 28 வகை பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. உணவுப்பொருட்களை கட்ட உபயோகப்படுத்தப்படும் நெகழித்தாள் உறை, தெர்மாக்கோல், தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட தேநீர் குவளைகள், தெர்மாக்கோல் குவளைகள், உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக், பிளாஸ்டிக் பூசப்பட்ட தாள், நீர் நிரப்ப பயன்படும் பைகள், பொட்டலங்கள் பிளாஸ்டிக் உறிஞ்சு குழாய்கள், பிளாஸ்டிக் பைகள் (எந்த அளவிலும் எந்த தடிமாக இருப்பினும்) பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித பைகள், பிளாஸ்டிக் கொடிகள், நெய்யாத பிளாஸ்டிக் தூக்கு பைகள், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட மிட்டாய், பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட காது குச்சிகள், பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட ஐஸ்கிரீம், பிளாஸ்டிக் கட்லரி, பிளாஸ்டிக் கத்திகள், அழைப்பிதழுக்கான ரேப்பர்கள், பிளாஸ்டிக் படங்கள் 100 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் அல்லது பிவிசி பேனர் பிளாஸ்டிக், கரண்டி பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சி, பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் கிளறிகள், அலங்காரத்திற்கான தெர்மாகோல், சிகரெட் பாக்கெட்டுகளைச் சுற்றி பிலிம்களைப் போர்த்தல் அல்லது பொதி செய்தல் ரேப்பிங் அல்லது பேக்கிங் படங்கள் மேற்கண்ட பொருட்களை உற்பத்தி செய்யவும் விற்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இத்தகைய பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதில்லை. உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் கண்டறியப்பட்டால் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரியால் தொழிற்சலையை மூடவும் மின்சாரத்தை துண்டிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். பிற மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்பட்டு இம்மாவட்டத்தில் கடைகளில் விற்பனை செய்யும் பிளாஸ்டிக் பொருட்களும் கைப்பற்றி அபராதம் விதிப்பதோடு கடையை மூடி சீல் வைக்கப்படும். இதற்காக நகராட்சி பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் மூலம் அடிக்கடி கடைகளில் சோதனை நடத்தப்படும்.


பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அனைத்து கடைகளிலும் பொதுமக்கள் பார்வையில் படும்படி துணிப்பைகள் விற்பனைக்கு வைக்க வேண்டும். கோவில் நகரமாகிய திருவண்ணாமலையில் ஒரு முறை பயன்பாடுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வதன் மூலம் பிளாஸ்டிக் குப்பைகள் உருவாகுவதை தவிர்த்து தூய்மையான நகரை உருவாக்க பொதுமக்களும் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும். தமிழ்நாடு முதல்வர் அறிவுறுத்தி உள்ள படி அனைவரும் மஞ்சப்பை உபயோகித்து ஒத்துழைப்பு தர வேண்டும். திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசிக்க பிற மாவட்டங்களில் இருந்து பல இலட்சம் மக்கள் பௌர்ணமி தினங்களில் கூடுகிறார்கள். எனவே திருவண்ணாமலையை பிளாஸ்டிக் குப்பைகள் இல்லா நகராக உருவாக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.