திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தொண்டமானூர் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே வலது ஆற்றங்கரையில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் 2004-ஆம் ஆண்டு தனியார் மூலமாக மாரியம்மன் கோயில் கட்டி முடித்து மக்கள் வழிபாட்டு செய்து வருகின்றனர். இங்கு ஆடி மாதம் முதல் மற்றும் 2-வது செவ்வாய்க்கிழமை ஒரு பிரிவினரும் 3-வது செவ்வாய்க்கிழமை மற்றொரு பிரிவினரும் பொங்கல் வைத்து விழா நடத்துவது வழக்கம். இதில் 3-வது செவ்வாய்க்கிழமை திருவிழா நடந்த போது 3 தெருக்களில் மட்டும் தேரோட்டம் நடைபெறும். மற்றொரு பிரிவினர் வசிக்கும் பகுதியில் தேரோட்டம் நடப்பதில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையை இந்த ஆண்டு ஆடி மாதம் 3-வது செவ்வாய்க்கிழமை (இன்று) 6-ஆம் தேதி திருவிழா நடைபெற உள்ளது. அப்போது எல்லா பகுதிகளிலும் தேரோட்டம் நடக்க வேண்டும் என தண்டராம்பட்டு தாசில்தார்  நடராஜரிடம் ஒரு பிரிவினர் கோரிக்கை மனு அளித்தனர்.




 


இந்து சமய அறநிலைத்துறை கீழ் கொண்டுவரப்பட்ட மாரியம்மன் கோயில் 


அதன் பெயரில் கடந்த 29-ஆம் தேதி தாலுகா அலுவலகத்தில் இருதரப்பினரும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது இருதாரப்பினரும் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். ஆனால் அதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை, இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மற்றும் துணை ஆட்சியர் ஆகியோருக்கு அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஜோதிலட்சுமி உத்தரவின் பேரில் செயல் அலுவலர்கள் தேன்மொழி உஷா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சௌந்தரராஜன், துணை காவல் கண்காணிப்பாளர் முருகன், தாசில்தார் நடராஜன், மண்டல துணை தாசில்தார் விஜயகுமார் ஆகியோர் காவல் துறையினர் தொண்டமானூருக்கு நேற்று சென்றனர். தொடர்ந்து மாரியம்மன் கோயிலை இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக கோயில் கதவின் பூட்டை கட்டிங் மெஷின் மூலமாக உடைத்து உள்ளே சென்றனர். 


 




வேலூர் டிஐஜி ராஜ்குமார் தாகூர்  இரு சமூகத்தினர் இடையே பேச்சுவார்த்தை


இதனை அறிந்த மற்றொரு பிரிவினர் கோயில் அருகே குவிந்தனர். தொடர்ந்து இந்த கோயில் தனியாருக்கு சொந்தமானது முன்னறிவிப்பு நோட்டீஸ் எதுவும் வழங்காமல் கோயிலை எப்படி கையகப்படுத்த முடியும் என கேட்டு அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது தகவல் அறிந்து வேலூர் டிஐஜி ராஜ்குமார் தாகூர், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பு ஆல்பர்ட் ஜான் ஆகியோர் அங்கு வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை குறித்து இரு சமூகத்தினர் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது சமரசம் ஏற்படவில்லை, எனவே இந்த கோயில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது என தாசில்தார் தெரிவித்தார்.




இது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை உதவி கமிஷனர் ஜோதிலட்சுமி பிறப்பித்த உத்தரவாதத்தில் கூறியதாவது 


தண்டராம்பட்டு அடுத்த தொண்டமானூரில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் தேர் திருவிழா நடத்துவது தொடர்பாக கிராம மக்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாசில்தார் மட்டும் காவல்துறையினர் முன்னணியில் கடந்த 29-ஆம் தேதி நடைபெற்ற கூட்டம். அப்போது கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர் முன்னணியில் இருதரப்பினரிடம் தண்டராம்பட்டு தாசில்தார் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அதில் திருக்கோயிலில் பொங்கல் வைத்து பூஜை செய்து வழிபாட இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். ஆனால் தேர்த்திருவிழா வீதி உலா தொடர்பாக இரு வேறு சமூகத்தினர் இடையே பிரச்சனை ஏற்பட்டு பேச்சு வார்த்தையில் சமரசம் எட்டப்படவில்லை. எனவே அரசுக்கு வரப்பெற்ற அறிக்கையில் அடிப்படையில் தொண்டமான் மாரியம்மன் கோயில் எல்லா தரப்பினரும் நல்லிணக்கத்துடன் வழிபாடு மேற்கொள்வதை உறுதி செய்யும் பொருட்டு பொது நலன் மற்றும் திருக்கோயில் நலன் கருதி 1959-ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய அறக்கட்டளை சட்டத்தின் கீழ் இந்த கோயில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. கோயிலுக்கு தற்காலிகமாக செங்கம் அருள்மிகு வேணுகோபால பார்த்தசாரதி திருக்கோயில் செயலாளர் தேன்மொழியை நியமனம் செய்யப்படுகிறது. அவர் உடனடியாக அங்கு பொறுப்பேற்று கோயில் வரவு செலவு கணக்குகளை கோவிலின் நிலையை சட்ட விதிகளின் படி கோயில் நிர்வாகத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் திருவிழாவை சரியாக நடத்த வேண்டும் என உத்தரவிட்டப்பட்டுள்ளது.  இவ்வாறு அதில் கூறப்பட்டிருக்கிறது. இதற்கிடையே அங்கு பதட்டமான நிலை நிலவுவதால் அங்கு பாதுகாப்பு பணியில் 250 காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.