பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை நகரில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள 12 மாதங்களிலும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவம் விழா, ஆனி மாதத்தில் ஆனி பிரம்மோற்சவ விழா, ஆடி மாதத்தில் ஆடி பிரம்மோற்சவம், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருவிழா, கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, தை மாதத்தில் உத்தராயன புண்ணிய காலம் என ஆண்டுதோறும் பல்வேறு பிரம்மோற்சவங்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் விமரிசையாக நடைபெறும்.
இந்த நிலையில் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாத பௌர்ணமிக்கும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து கிரிவலம் மேற்கொள்வது வழக்கம். நேற்று அதிகாலை ஆவனி மாத பௌர்ணமி நள்ளிரவு 02.58 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 01.02 மணிக்கு நிறைவு அடைந்தது. ஆவனி மாதம் பௌர்ணமி கிரிவலத்திற்காக பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து நேற்று இரவு முதல் விடிய விடிய கிரிவலம் மேற்கொண்டனர். திருவண்ணாமலை மாநகராட்சியில் உள்ள அனைத்து தெருக்களிலும் தெலங்கானா, ஆந்திரா, கர்நாடக மாநில கார்களும் இரண்டு சக்கர வாகனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாநகராட்சிக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இயக்கப்பட்டது. மேலும் கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல ஏதுவாக திருவண்ணாமலையில் ரயில் நிலையத்தில் விடியற்காலை முதல் குவிந்தனர்.
ரயில் நிலையத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக இருந்தனர். காலையில் விழுப்புரத்தில் இருந்து காட்பாடி செல்லும் பயணிகள் ரயில் திருவண்ணாமலை வந்தடைந்தது. அப்போது திருவண்ணாமலை வந்தடைந்த ரயிலில் ஆவனி மாத பௌர்ணமி கிரிவலம் முடித்து ரயில் நிலையத்தில் காத்திருந்த ஏராளமான பயணிகள் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டும், முண்டியடித்து கொண்டும் ரயிலில் ஏறினர். ரயிலில் இடம் இல்லாததால் பக்தர்கள் படிகளிலும், லக்கேஜ் வைக்கும் இடங்களில் பக்தர்கள் அமர்ந்து கொண்டு சென்றனர். ரயில் புறப்பட்டு சென்றும் ஏராளமான பக்தர்கள் அடுத்து வரும் ரயிலுக்காக காத்திருக்கும் சூழலும் நிலவியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் ரயில் நிலையத்தில் ஒன்று கூடியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதேபோன்று திருவண்ணாமலை தற்காலிக பேருந்து நிலையங்களில் பேருந்திற்கு முட்டி மோதிக்கொண்டு ஏறினார். அதேபோன்று மாநகராட்சி சுற்றியுள்ள சாலையில் காலைமுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.