தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அதிகபட்சமான வெப்பநிலை பதிவாகி வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு மே மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 10 மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை என்பது 43 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 4 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39°-43° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 37°-39° செல்சியஸ் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




 


திருவண்ணாமலையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு 


மேலும் மே 2 ஆம் தேதி மற்றும் 3 ஆம் தேதி இரண்டு தினங்களுக்கு வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர், கரூர், கோவை, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த தினேஷ் வயது  (35) இவர் புதுப்பாளையம் கிராமத்தில் கடந்த 10ஆண்டுக்கு மேலாக கோழிபண்ணை வைத்து கோழிகளை வளர்த்து வருகிறார்.  தற்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்திலேயே வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகளவில் நேற்று காணப்பட்டது.


 




 


வெயிலின் தாக்கத்தால் கோழிகள் உயிரிழப்பு 


வேலூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக வெயிலின் தாக்கம் அதிகப்படியாக காணப்படுகின்றது. திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் வெப்ப அலை வீசப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று வெயிலின் தாக்கம் அதிகப்படியாக  இருந்த நிலையில் வெயிலின் வெப்பம் தாங்க முடியாமல் சுமார் 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீலான 350 கோழிகள் திடீரென இறந்து விட்டன. இதனை அறிந்த கோழிப்பண்ணை உரிமையாளர் தினேஷ் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் பண்ணை அருகில் தனது சொந்த இடத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி கோழிகளை புதைத்தார். தொடர்ந்து வெயில் தாக்கம் உள்ளதால் மேலும் கோழிகள் இறக்க நேரிடுவதாகவும் இதனால் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் கால்நடை வளர்போர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.