கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் சம்பவம் எதிரொலியாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் தொடர்ந்து கள்ளச்சாராய வேட்டையில் காவல்துறையினர், ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 59 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக, நீதி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிபிசிஐடி விசாரணை தீவிரம் அடைந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மேலும், தமிழக முழுவதும் கள்ளச்சாராய வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கள்ளச்சாராய வேட்டையில் காவல்த்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு தாலுக்காவில் சம்பந்தப்பட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.
கள்ளச்சாராயம் விற்பனை செய்த 138 பேர் கைது
இதுமட்டும் இன்றி , மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை கண்காணிப்பாளர் ரமேஷ்ராஜ் தலைமையில் திருவண்ணாமலை, போளூர், செங்கம், செய்யாறு பகுதியில் உள்ள கலால் பிரிவு காவல்துறையினர் தீவிர கள்ளச்சாராய வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலையில் மாவட்ட கவல்கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் கள்ளச்சாராய வேட்டை நடந்தது. திருவண்ணாமலை நகரப்பகுதியிலுள்ள கால்நகர், சமுத்திர காலனி, தியாகி அண்ணாமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட கவாழ்க்கணிப்பாளர் நேரடியாக சென்று சோதனையில் ஈடுபட்டார். அப்போது, கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக சந்தேகப் பட்டியலில் இருந்த வீடுகளுக்கு நேரில் சென்று சோதனை நடத்தப்பட்டது. இதில், பெரும்பாலான வீடுகள் பூட்டப்பட்டிருந்தன. அதனைத்தொடர்ந்து, காவல்துறையினர் பெருங்குளத்தூர், இளையாங்குண்ணி, தானிப்பாடி, தட்டரணை, தண்டராம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக நடந்த அதிரடி சோதனையில், 56 பெண்கள் உள்பட மொத்தம் 138 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1,750 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் அழிப்பு
அவர்களிடம் இருந்து 1,480 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், சுமார் 1,750 லிட்டர் கள்ளச்சாராய ஊறல் கைப்பற்றப்பட்டுள்ளன.மேலும், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கல்வாராயன் மலையில் அதிரடி சோதனை நடந்து வருவதால், அங்கிருந்து கள்ளச்சாராயம் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மேல்வலசை, கீழ்வலசை, அக்கறைப்பட்டி வழியாக கொண்டுவரப்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்டையில், அந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.அதேபோல், ஜவ்வாது மலையில் கள்ளச்சாராய ஊறல் தொடர்பாக கிடைத்த தகவலின்பேரில், அங்கு தனிப்படையினர் தொடர்ந்து முகாமிட்டு அதனை அழித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் இன்னும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தச்சம்பட்டு,வெறையூர், வாணபுரம், தலையாம்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காடுகளின் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாகவும், கிராமத்தின் அருகாமையில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் வேதனை அடைகின்றனர்.