திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு நகராட்சி 10 பேரூராட்சிகளில் 860 ஊராட்சிகளில் தினந்தோறும் வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை சேகரிக்கும் பணியினை தூய்மைப்பணியாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். திருவண்ணாமலை நகராட்சியில் 39 வார்டுகளில் உள்ள மக்கள் தொகை 1 இலட்சத்து 65 ஆயிரம் உள்ளனர். இதன் சுற்றளவு 13.64 கிலோமீட்டர் ஆகும். நாள்தோறும் 24 லாரி (இலகுரக கனரக) மற்றும் 60 பேட்டரி வண்டிகள் மூலம் 254 ஒப்பந்தப்பணியாளர்கள் மற்றும் 55 நிரந்தர துப்புரவு பணியாளர்களை கொண்டு தினமும் மக்கும் குப்பை 35 டன் மற்றும் மக்காத குப்பை 20 டன் சேகரிக்கப்பட்டு குப்பை கிடங்கில் சேர்க்கப்படுவதை 10 மேற்பார்வையாளர் 13 தற்காலிக மேற்பார்வையாளர் மூலம் பணிகள் நடைபெறுகிறது. இன்று திருவண்ணாமலை நகராட்சியில் வார்டு எண் 12 ல் வீடு வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பையை சேகரிப்பதை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.
மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பொதுமக்களிடம் பேசுகையில்,
பொதுமக்களிடம் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் ப்ளாஸ்டிக் பையினை பயன்படுத்துவதை தவிர்த்து நமது நகரத்தை தூய்மையாக வைத்திருக்க சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் நோக்கதிடனும், எதிர்கால மக்களின் நலனை காக்கவும் நகரத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள ஒவ்வொரு தனிமனிதனும் முயற்சி செய்தால் மட்டுமே நமது நகரத்தை தூய்மையாக வைத்துகொள்ள முடியும். மேலும் பெண்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படுத்தப்படும் திட்டங்கள் பெண்களை சார்ந்தே அமைந்துள்ளது. அதேபோல் பெண்கள் நினைத்தால் மட்டுமே குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பை மக்காத குப்பை என வழங்க முடியும். அப்படி தரம் பிரித்து தரும்பட்சத்தில் நகரில் மையத்தில் உள்ள குப்பை கிடங்கில் குப்பை சேகரிப்பை குறைக்க முடியும். மக்காத குப்பை சேகரிப்பை தவிர்க்க முடியும். மேலும் பிற மாநிலங்களிலிருந்து திருவண்ணாமலை நகராட்சிக்கு எண்ணற்ற பக்தர்கள் வருகிறார்கள்.
அவர்களுக்கு நம்முடைய நகரத்தினை தூய்மையாக வைத்திருக்க உறுதுணையாக இருக்க எடுத்துரைக்க வேண்டுமெனவும் கிரிவலப்பாதையில் வர்த்தகர்கள், கடை உரிமையாளர்கள் தங்களுடைய நிறுவனங்கள் மூலம் வரக்கூடிய குப்பைகளை தரம்பிரித்து வழங்குவதால் மட்டுமே கிரிவலப்பாதையை தூய்மையாக வைத்திருக்க ஏதுவாக இருக்கும். கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளில் உற்பத்தியாகும் பொருட்களின் குப்பைகளை குப்பை தொட்டி வைத்து குப்பைகள் பறக்காமல் இருக்க குப்பை தொட்டிகளை வைக்கவேண்டும். மேலும் மஞ்சப்பை, துணிப்பை, பாத்திரங்கள் பயன்படுத்த மாவட்ட நிர்வாகத்திற்கும், நகராட்சிக்கும் உறுதுணையாக இருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்களிடம் இவ்வாறு பேசினார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் மரு. மு.பிரியதர்ஷினி, வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, நகராட்சி ஆணையர் எம்.ஆர் வசந்தி, நகரமன்ற துணைத்தலைவர் ராஜங்கம், சுகாதார அலுவலர் செல்வராஜ், மற்றும் அரசு அலுவலர்கள் தூய்மைப்பணியாளர்கள் உடனிருந்தனர்.