திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் கீக்களுர் கிராமத்தில் உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்ட நபரின் உடலுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் அரசு மரியாதை செலுத்தினார். உடல் உறுப்புகள் தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கானோருக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது. மூளைச்சாவு அடைந்த துயர சூழ்நிலையிலும், உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால் தான் இந்த சாதனை சாத்தியமாகி உள்ளது. உடல் உறுப்புகளை தானமாக வழங்கி பல உயிர்களை காப்போரின் தியாகத்தினை போற்றிடும் வகையில் அவர்களது உடலுக்கு இறுதி சடங்குகள் அரசு மரியாதைகளுடன் மேற்கொள்ளப்படும் என கடந்த ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டம் கீக்களுர் கிராமத்தில் வசித்து வந்த தொப்புளான் மகன் கண்ணையன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வயது- (69) என்பவர் கடந்த (22.02.2024) அன்று தனது வீட்டில் உள்ள குடிநீர் தொட்டியில் சுத்தம் செய்வதற்காக மேலே ஏறியவர் தவறி விழுந்து தலையில் அடிப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்கைக்காக சென்னை இராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் (23.02.2024) அன்று இரவு 11:30 மணியளவில் மூளைச்சாவு அடைந்துள்ளார். மேற்படி நபரின் உடல் உறுப்புகள் அவரது உறவினர்கள் ஒப்புதலுடன் தானம் வழங்கப்பட்டுள்ளது. எனவே மேற்படி நபரின் பூத உடலுக்கு (24.02.2024) மாலை 2:30 மணியளவில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மூலம் உடல் உறுப்புகள் தானம் வழங்கியதன் அடிப்படையில் அரசு அறிவித்துள்ள திட்டத்தின் மூலம் மேற்படி நபரின் பூத உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் மண்டல துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.