திருவண்ணாமலை அடுத்த காட்டம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் வேணுகோபால் வயது (87). இவருடைய மனைவி உதிராமல். இவர்களுக்கு ஒரு மகன் 2 மகள்கள் உள்ளனர். 24வது வயதில் மக்களால் காட்டாம்பூண்டி ஊராட்சியின் ஊராட்சி மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். 1970-ல் திருவண்ணாமலை ஒன்றிய பெருந்தலைவர் தேர்தலில் கவுன்சிலராக வெற்றி பெற்றிருந்தார். அப்போது உள்ளாட்சி மற்றும் உணவுத்துறை அமைச்சராக இருந்த ப.உ. சண்முகம் காங்கிரஸ் கட்சியிலிருந்த த. வேணுகோபாலை தி.மு.கவில் சேர்த்து அவரை திருவண்ணாமலை ஒன்றிய பெருந்தலைவராகத் தேர்ந்தெடுதத்தர். வேணுகோபால் ஒன்றிய பெருந்தலைவராய் பதவி வகித்த காலத்தில், திருவண்ணாமலை ஒன்றியத்தில் கிராமங்களுக்கு தார்ச்சாலை கிராமங்களுக்கு இடையிலான இணைப்பு சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளோடு கிராம சாலைகள் இணைப்பு, கிராமங்களில் பள்ளிக் கட்டடங்கள் எனப் பலவற்றைக் கொண்டுவந்தார்.
இதனால் 1977- 1980-ஆம் ஆண்டு அதிமுகவின் எம்.ஜி.ஆர் இருந்த பொது தண்டராம்பட்டு தொகுதியில் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டு முதல்முறை எம்.எல்.ஏ ஆனார். அடுத்த நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வேணுகோபால் நிறுத்தப்பட்டார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் காசிநாதனுக்கு சீட் தரப்பட்டது. 1996, 1998, 1999, 2004 ஆண்டுகளில் திருப்பத்தூர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 2009ல் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். 2009ம் ஆண்டு இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிட்ட வன்னியர் சங்க காடுவெட்டி குருவை தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். தொடர்ச்சியாக ஐந்து முறை ஒரே தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்ற உறுப்பினராக இருந்தவரை சொந்தமாக கார் கூட வாங்கவில்லை. பேருந்தில் தான் பயணம் செய்து வந்தார். தனது சொந்த ஊரான காட்டாம்பூண்டியில் இருந்து தினமும் பேருந்தில் திருவண்ணாமலைக்கு வருவார்.
காமராஜர் சிலை அருகே இறங்கி திருவூடல் தெருவில் உள்ள தனது வீட்டுக்கு நடந்தே வருவார். கார் வாங்கிய பிறகும் இவரது மனைவி தனது உடல்நிலைக்கு மருந்து, மாத்திரை வாங்க வீட்டிலிருந்து 1.கி.மீ தூரமிருந்த அரசு மருத்துவமனைக்கு நடந்தே சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டு வருவார். ஊராட்சி மன்றத் தலைவராக, ஒன்றிய பெருந்தலைவராக, கூட்டுறவு சங்க தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வேணுகோபால். திமுகவில் கடந்த 33 ஆண்டுகளாக தெற்கு மாவட்ட கழக அவைத் தலைவராக இருந்து வந்தார். நாடாளுமன்றம் இல்லாத சமயங்களில் தினமும் காட்டாம்பூண்டியில் உள்ள தேநீர் கடையில் சாதாரண மனிதராக காலை, மாலை தேநீர் அருந்துவார். கட்சியினர், பொதுமக்கள் எனப் பலரையும் சந்திப்பார். யார் அழைப்பிதழ் கொடுத்தாலும் தவறாமல் கலந்துகொள்வார். அமைதியானவர் எனப் பெயரெடுத்தவர். இவருக்கு கழகத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான தந்தை பெரியார் விருது வழங்கியது திமுக தலைமையகம் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி, திருவண்ணாமலை, செங்கம், கீழ்பென்னாத்தூர் தொகுதிகளில்
80 சதவித கிராமங்களில் தனது எம்.எல்.ஏ நிதி, எம்.பி நிதியில் இருந்து பள்ளிக்கூடம், குடிநீர் மேல்நிலைத்தொட்டி, சாலை வசதிக்கு முக்கியத்துவம் தந்து நிதி ஒதுக்கி பணிகளை செய்து முடித்துள்ளார். மேலும் திருவண்ணாமலை மாவட்ட வன்னியர் குல சத்திரிய வள்ளலால மகாராஜா மடாலய சங்க தலைவராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் இருதய பாதிப்பு சிகிச்சை பெற்று வந்த வேணுகோபாலின் உடல் நிலை கடந்த 10 நாட்களாக பாதிக்கப்பட்டு இருந்தார். திருவண்ணாமலை மாவட்டம் தென்மாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 9ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உடல்நிலையில் முன்னேற்றம் அடையவில்லை என்று அறிந்த வேணுகோபால் தனது குடும்பத்தினரிடம் தான் வாழ்ந்த வீட்டில் என்னுடைய உயிர் பிரியவேண்டும் என்று கூறியுள்ளார். அதன் பிறகு மருத்துவமனையில் இருந்து நேற்று டிஜார்ஜ் செய்யப்பட்டு சொந்த வீட்டிற்கு வந்தார். அவருடைய நாடி துடிப்பு மெல்ல மெல்ல குறைந்து பிற்பகல் 2.25 மணிக்கு உயிரிழந்தார். இவருடைய இறுதி சடங்கு இன்று நடைபெற உள்ளது. இவருடைய மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்தனர்.