திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் அரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையில், தமிழ்நாடு மாநில மகளிர்
ஆணையத்தின் தலைவர் ஆ.ச.குமரி தலைமையில் இன்று அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
மேலும் பெண்கள் பாதுகாப்பு இல்லம், முதியோர் பாதுகாப்பு இல்லம், அரசு பிற்படுத்தப்பட்டோர் விடுதிகள், அரசு ஆதிராவிடர் மற்றும் பணிவுடன் நல விடுதிகள் நலவிடுதிகள் மற்றும் தனியார் பெண்கள் தங்கும் விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் மாவட்ட ஒருங்கிணைந்த குழு கூட்டத்தில் பேசியதாவது :
பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளை கற்போம் திட்டத்தின் கீழ் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பள்ளியில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டிகளை வைக்க வேண்டும். இந்தப் புகார் பெட்டியில் போடப்படும் புகார் கடிதங்களை பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் தான் திறக்க வேண்டும். பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் இடைநிற்றலை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் அவசியம் குறித்து பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் புரிய வைக்க வேண்டும். தேர்வில் மாணவர்கள் மதிப்பெண் குறைவதால் தற்கொலை செய்து கொள்கின்றனர். மதிப்பெண் குறைவாக எடுக்கின்ற மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் தகுந்த ஆலோசனைகளை வழங்கி அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
குறிப்பாக மலைவாழ் மாணவ,மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து அவர்களின் பெற்றோர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து அவர்கள் பள்ளியில் சேர்த்து கல்வி கற்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் 181 கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைத்து புகார் அளிக்கும் பெண்களுக்கு ஆதரவாகவும் அவர்களின் பிரச்சனைகளை பொறுமையுடன் கேட்டறிந்து காவல்துறை உதவியுடன் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். இளம் வயது திருமணத்தால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.பள்ளி ஆசிரியர்களும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவிகளின் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். இளம் வயதில் கருவுறுவதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து பெண்களுக்கு விழிப்புணர் ஏற்படுத்த வேண்டும். மாவட்டத்தில் இயங்கும் அனைத்து ஸ்கேன் மையங்களில் மருத்துவம் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும்.
காவல்துறையில் புகார் அளிக்க வருகை தரும் பெண்களுக்கு ஆறுதலாகவும் அவர்களின் பிரச்சனைகளை கேட்டு அறிந்து அதனை தீர்ப்பதற்கு காவல்துறையினர் உதவி செய்ய வேண்டும். மாவட்ட சமூக நல அலுவலர்கள் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு இல்லங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின் மாணவிகள் நல விடுதிகளில் துறை அலுவலர்களுடன் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், உணவு வழங்கப்படுகிறாதா என்றும் அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதனை சரி செய்ய வேண்டும். மேலும் மகளிர் திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கி அவர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்க வேண்டும். பெண்களின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்தால் தான் நாடும் வளர்ச்சி அடையும் என்றும் அதற்கு அனைத்து துறைகளும் ஒத்துழைப்பு அளித்து இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.