திருவண்ணாமலை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் ஜமுனாமரத்தூர் மலை இருந்து வருகிறது. ஒரு காலத்தில் இங்கு தான் சந்தன மரங்கள் அதிகம் காணப்பட்டது. காற்று வீசும் போது பல கிலோமீட்டர் தூரத்திற்கு சந்தன நறுமணம் வீசும். தற்போது அந்த அறிகுறியே இல்லை. அனைத்து மரங்களும் கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டு விட்டது. தற்போது ஜவ்வாது மலையின் தொடர்ச்சியாக உள்ள மொடையூர், பெரணம்பாக்கம், வடவிளாப்பாக்கம், விளாப் பாக்கம், தேவிகாபுரம், தச்சூர் ஆகிய கிராமங்களை ஒட்டியுள்ள குன்றுகள் என பல்வேறு பகுதியில் வனத்துறை செம்மரங்கள் நடந்து தற்போது பெரிய மரங்களாக வளர்ந்துள்ளன. இதன் மதிப்பு பல லட்சங்கள் உள்ளது. போளூர் தாலுகா முடையூர் குன்றின் மீது வனத்துறை சார்பில் சுமார் 1500 செம்மரங்கள் நடப்பட்டு பெரிய அளவில் வைரம் பாய்ந்த மரங்களாக வளர்ந்து காணப்படுகிறது.


 




செம்மரங்கள் கடத்தல் 


கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இரவு நேரத்தில் செம்மர கடத்தல் கும்பலால் சுமார் 25-க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான செம்மரங்களை இயந்திர மிஷின் மூலம் அடியோடு அறுத்து அதனை துண்டாக அறுத்து கடத்தி சென்றுள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் தகவலறிந்து குன்னின் மீது சென்று பார்த்தபோது பெரிய அளவிலான செம்மரங்கள் அடியோடு அறுக்கப்பட்டு அதனை துண்டு துண்டாக்கி கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் கடத்திச் சென்றுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட வனத்துறை அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வனத்துறை அதிகாரிகள் நேரில் வந்து கடந்த ஒரு வாரமாக கட்டைகளை சேகரித்து அடையாளம் தெரியாத கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களை தேடி வருவதாக தெரிகிறது. அடியோடு அறுக்கப்பட்ட செம்மரங்களுக்கு வனத்துறை அதிகாரிகள் பெயிண்ட் மூலம் 1, 2 என வரிசைஎண் எழுதியுள்ளனர்.


 




இதுகுறித்து ஒரு சில வனக்காவலர்கள் வட்டரத்தில் கேட்டபோது


செம்மரம் எதுவும் திருடு போகவில்லை. வேறு சில சின்ன சின்ன மரங்கள் வெட்டப்பட்டுள்ளன என்று கூறுகின்றனர். ஆனால் உள்ளே சென்று பார்த்த போது பெரிய அளவிலான செம்மரங்கள் அடியோடு அறுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அப்பகுதி மக்களிடம் கேட்டபோது வனத்துறை அதிகாரிகளின் ஆசீர்வாதத்துடன் செம்மரம் அடிக்கடி வெட்டி கடத்திச் செல்வது வாடிக்கையாகிவிட்டது. இரவு நேரத்தில் வன காவலர்கள் இங்கு வந்து தங்கி பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். தற்போது எந்த வனக்காவலரும் இங்கு வந்து தங்கி பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக தெரியவில்லை என அப்பகுதி பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செம்மரங்களை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மொடையூர் குன்றின் மீது உள்ள செம்மரங்களை வெட்டி கடத்தி சென்ற கடத்தல் கும்பலை வனத்துறை அதிகாரிகள் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


 




இதுகுறித்து பொதுமக்கள் 


ஜவ்வாதுமலை சுற்றிலும் செம்மரங்கள், சந்தன மரங்கள் அதிக அளவில் இருந்தது. அதனை வனத்துறையினர் பாதுகாப்பாகப் பார்க்காததால் பல்வேறு இடங்களில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்பட்டுள்ளன. அதன் பிறகு வனத்துறையின் மூலம் பல்வேறு மலை குன்றின்மீது சந்தனமரம், செம்மரம் உள்ளிட்டவைகள் கடத்தப்பட்டன. அதனை வனக்காவலர்கள் பாதுகாத்து வளர்த்து வருகின்றனர். அப்படி போளூர் அருகே மொடையூர் குன்றின் மீது உள்ள 25 செம்ம மரங்களை வெட்டி செம்மர கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் கடத்திச் சென்றுள்ளனர். இதனை வனத்துறை அதிகாரிகள் மூடி மறைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.