திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு வளையம் பொதுப்பணித்துறை துறை அமைச்சர் எ.வ.வேலு, பொது நிதி 2023 -24 திட்டத்தின் கீழ் ரூபாய் 25 இலட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, 244 பயனாளிகளுக்கு ரூபாய் 23 இலட்சத்து 93 ஆயிரத்து 200 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் வழங்கினார். தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினார் சி.என்.அண்ணாதுரை, கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


 




இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்ததாவது;


ஒரு அரசு அலுவலகம் உள்ளே சிறப்பாக செயல்படுகிறது, நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது என்றால் கட்டிடத்திற்கு நுழைவு வாயில் தான் காரணம். இந்த அற்புதமான கலைஞர் நூற்றாண்டு நினைவு வளைவு நுழைவு வாயில் 37 ஊராட்சி மன்ற தலைவர்கள், 18 ஒன்றியக்குழுத் உறுப்பினர்கள் இணைந்து கலைஞரின் நூற்றாண்டினை நினைவு கூறும் வகையில் கலை நோக்கத்துடன் இந்நுழைவு வாயில் சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் தமிழ்நாட்டில் எதுவெல்லாம் நடக்காது என இருக்கிறதோ அதையெல்லாம் நடத்திக் காட்டுகிற ஆட்சித்தான் திராவிட மாடல் ஆட்சி. மூன்றாண்டுகளில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகளில் அதிகமான அளவு பயன்பெற்ற தொகுதி என்றால் கலசபாக்கம் சட்டமன்ற தொகுதி. ஏனென்றால் இங்கு அதிகமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, மேம்பாலம், நெல் கொள்முதல் நிலையம், பருவதமலைக்கு படிக்கட்டுகள், கேட்டவரம்பாளையம்பிள்ளை ஊராட்சியில் ரூபாய் 4 கோடி மதிப்பீட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடம், ரூபாய் 180 கோடி மதிப்பீட்டில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக ஏறத்தாழ 70 கிலோமீட்டர் தொலைவில் சாலைப்பணிகள், பொதுப்பணித்துறை சார்பில் 17 கோடியே 77 இலட்சம் மதிப்பீட்டில் பணிகளும்,ரூபாய் 58 கோடி மதிப்பீட்டில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக உள்ளாட்சி பணிகளும் நடைபெற்று உள்ளது. 


 


 




அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் திட்டங்கள் அறிவிப்பு 


புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் நமக்கு நாமே திட்டத்தின் வாயிலாக 76 இலட்சம் மதிப்பீட்டில் 16 பணிகளும், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மூலமாக ரூபாய் 100 கோடியே 60 இலட்சம் மதிப்பீட்டில் பணிகளும், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலமாக 1கோடியே 28 இலட்சம் மதிப்பீட்டிலும், ஆதிதிராவிடர் குடியிருப்பு அடிப்படை வசதிகளை என பல பணிகள் திராவிட மாடல் ஆட்சியில் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உள் விளையாட்டு அரங்கம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆதமங்கலம் புதூரில் காவல்நிலையம் என பல்வேறு திட்டப்பணிகள் அமைக்கப்படயிருக்கிறது.


திராவிட மாடல் ஆட்சியில்தான் மகளிருக்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை மாதந்தோறும் 1000 என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திராவிட மாடல் ஆட்சி என்றால் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது பொருள். பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் என்ற சிறப்பான திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறார்கள். இதுபோன்று அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியிருக்கிறார்கள் என தெரிவித்தார்.


இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, புதுப்பாளையம் ஒன்றியக்குழுத்தலைவர் சி.சுந்தரபாண்டியன்,வட்டாட்சியர்,வட்டார வளர்ச்சி அலுவலர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.