திருவண்ணாமலை: அரசுக்கு வருவாய் முக்கியம் ஆனால் வரிகள் விதிக்கும் பொழுது வியாபாரிகள் தாக்குப் பிடிக்கும் அளவிற்கு வரிகளை விதிக்க வேண்டும் என்றும் இந்தியாவிலேயே வறட்சிக்கு நிவாரணம் வழங்கிய ஒரே அரசு அதிமுக அரசு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்!
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் பல்வேறு மாவட்டங்களில் தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன் பேரில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தந்த அவர் இன்று காலை தனியார் தங்கும் விடுதியில் விவசாய சங்க பிரதிநிதிகள், வணிகர் சங்க பிரதிநிதிகள், நெசவாளர் சங்கப் பிரதிநிதிகள், மலைவாழ் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடினார்.
குளிரூட்டப்பட்ட கிடங்கு வேண்டும்
அப்போது பேசிய அவர், சங்கப் பிரதிநிதிகள், 2026 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தால் திருவண்ணாமலைக்கு குளிரூட்டப்பட்ட கிடங்கு ஏற்படுத்தி தர வேண்டும், சென்ட் தொழிற்சாலை, எண்ணெய் தொழிற்சாலை உள்ளிட்டவைகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், எட்டு வழி சாலையை கைவிட வேண்டும், சிப்காட் திட்டத்தை கைவிட வேண்டும் கைத்தறி நெசவை பாதுகாக்க வேண்டும் விபத்துக்களை தடுக்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அவரிடம் அளித்தனர்.
அனைத்து மனுக்களையும் பெற்றுக் கொண்ட அவர் அனைத்து சங்க பிரதிநிதிகளிடம் சிறப்புரை ஆற்றினார். கைத்தறி நெசவிற்காக பல்வேறு காலகட்டங்களில் அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், மக்கள் எண்ணங்களை நிறைவேற்றும் வகையில் அதிமுக அரசு செயல்பட்டதாகவும் கூறினார். அரசுக்கு வருவாய் முக்கியம் என்றும் அதேபோல் அனைத்து வரிகளும் முக்கியம் தான் என்றும் ஆனால் வரிகள் விதிக்கும் பொழுது வியாபாரிகள் தாக்குப் பிடிக்கும் அளவிற்கு வரி விதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
வேளாண் மக்களுக்கு வறட்சி நிவாரணம்
தொழில் செய்பவர்களுக்கு பாதுகாப்பாகவும் அவர்கள் தாக்குப் பிடிக்கும் அளவிற்கு வரிகளை விதித்து அரசு காப்பாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட அவர் பல்வேறு சோதனைகளை அதிமுக அரசு சந்தித்து கடுமையான வறட்சியிலும் வேளாண் மக்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்கியதை சுட்டிக்காட்டி பேசிய அவர், விவசாயம் தொழில் ஆகிய இரண்டும் இரு சக்கரம் போல என்றும் கூறினார்.
நிலம் எடுக்கும் பிரச்சனை என்பது சவாலான பிரச்சனை என்றும் வளர்ந்து வரும் நவீன விஞ்ஞானம் மிகுந்த வேகமான உலகத்தில் அதற்கு தகுந்தார் போல அரசு செயல்பட்டால் நாமும் நாடும் வளர முடியும் என்றார். நமது காலம் வேறு தற்பொழுது உள்ள இளைஞர்களின் காலம் வேறு என்றும் அரசு அனைவருக்கும் ஏற்றார் போல காலத்திற்கு ஏற்றார் போல சரியாக அனைத்தையும் கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதிமுக ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கும், பல்வேறு தரப்பினர்களுக்கும் தீட்டப்பட்ட திட்டங்கள் குறித்து விவரித்து பேசியவர், அரசு அனைத்து விதத்தையும் ஆராய்ந்து பார்த்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
அதிமுக ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசிடம் பேசி ஜிஎஸ்டி களைய முயற்சிக்கப்படும்
அதிமுக ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசிடம் பேசி ஜிஎஸ்டி களைய முயற்சிக்கப்படும் என்றும் சாலை விபத்துக்களை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். தற்போதைய இளைஞர்கள் ஆபத்தை உணர்வதில்லை என்றும் வாகனங்களில் அதிவேகமாக செல்வதால் விதிகளை கடைபிடிக்காமல் பல்வேறு விபத்துக்கள் நேர்வதாகவும் பெற்றோர்கள் குழந்தைகளை சரியான பாதையில் அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். பெற்றோர்கள் பிள்ளைகள் மீது வைக்கப்படும் பாசத்தால் இளைஞர்களுக்கு விளைவுகள் அதிகம் ஏற்படுவதையும் சுட்டிக்காட்டி பேசினார்.
தற்பொழுது உற்பத்தி அதிகம் என்பதால் அதனை சந்தைப்படுத்த உட் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும், இதனால் வாகனங்கள் தேவைப்படுவதாகவும், சாலை விரிவாக்கம் செய்யப்படுவதாகவும், சாலை பாதுகாப்போடு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் பல்வேறு நடைமுறைகளை பின்பற்றி விபத்தை குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர் விபத்துக்களை தடுக்க அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்கள் இருந்ததாகவும் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 7 அரசு சட்டக் கல்லூரிகள், 17 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டிற்கு வந்ததாகவும், தமிழ்நாட்டில் 6 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதாகவும் கூறினார். 2020-21 ஆண்டைக் காட்டிலும் 2024-25 ஆண்டில் திமுக ஆட்சியில் 1லட்சத்து 36 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் உள்ளதாகவும் ஆனால் தற்பொழுது பெறப்படும் கடன் தொகையை சேர்த்து 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடந்த 5 ஆண்டுகளில் கடன் பெற்றுள்ளதாகவும் கூறினார்.திமுக தற்பொழுது வைத்துள்ள கடனை கூடுதல் வரி செலுத்தி தான் கடனை தீர்க்க முடியும் என்று சுட்டிக்காட்டி பேசியவர் விவசாயிகள் எளிய முறையில் கடன் பெற வழிவகை செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.