நீதிமன்ற ஆணைக்குப்பிறகு இன்று காவலில் எடுத்து விசாரிக்கும் போலீசார்..


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாலையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியும், இளைஞர் ஒருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது


இந்த நிலையில், இருவரும் கடந்த மார்ச் 23-ம் தேதி சாயல்குடி அருகேயுள்ள மூக்கையூர் கடற்கரைக்குச் சென்றிருக்கின்றனர். அப்போது அங்கு வந்த கமுதி கே.வேப்பங்குளத்தைச் சேர்ந்த பத்மாஸ்வரன் (24), நத்தகுளம் தினேஷ்குமார் (23), பசும்பொன் பகுதியைச் சேர்ந்த அஜித் (24) உள்ளிட்ட சிலர் அந்த இளைஞரைத் தாக்கிவிட்டு, அவர் கண்முன்னே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து மேலும் இருவரிடம் இருந்த செல்போன், நகைகள், பணம் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு மிரட்டி அனுப்பியுள்ளனர்.





இந்தச் சம்பவத்தால் மன உளைச்சல் அடைந்த இளம்பெண்ணின் காதலன் மார்ச் 24-ஆம்  விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்,  இது தொடர்பாகத் தகவலறிந்த அருப்புக்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி ராமநாதபுரம் எஸ்.பி அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.


இதனையடுத்து, இது தொடர்பாக கடந்த மார்ச் 25-ம் தேதி வேப்பங்குளம் காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த பத்மாஸ்வரன், தினேஷ்குமார் ஆகியோரைப் பிடிக்கச் சென்ற நவநீதகிருஷ்ணன், கருப்பசாமி ஆகிய 2 போலீஸாரை குற்றவாளிகள் அரிவாளால் தாக்கியதாக சொல்லப்படுகிறது.


போலீஸார் இருவரையும் பிடிக்க முயன்றபோது, இருசக்கர வாகனத்தில் தப்பி ஓட முயன்று இருவரும் கீழே விழுந்து  படுகாயமடைந்தனர். இருவரையும் கைது செய்து கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அஜித்தை திருப்பூரில் வாகன சோதனையில் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மூன்று  பேரிடமும் டி.ஐ.ஜி மயில்வாகனன், எஸ்.பி கார்த்திக் ஆகியோர் விசாரணை நடத்தினர்.





மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் விசாரணையில் தெரியவந்தும், போலீஸார் குற்றவாளிகள் மீது வழிப்பறி மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்த வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே அந்த மாணவியும் 29-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதையடுத்து, அருப்புக்கோட்டை நீதித்துறை நடுவர் மணிமேகலை பாதிக்கப்பட்ட மாணவியிடம் ரகசிய இடத்தில் வைத்து வாக்குமூலம் பெற்றார். அப்போது தன்னை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி கூறியுள்ளார். அதன்பேரில் இந்த வழக்கு பாலியல் வன்கொடுமை வழக்காக மாற்றி விசாரணை நடத்த ராமநாதபுரம் எஸ்.பி-க்கு நீதிபதி உத்தரவிட்டார்.


அதைத் தொடர்ந்து வழக்கு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலிருந்து சம்பவம் நடைபெற்ற ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. மாணவியின் வாக்குமூலம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. எஸ்.பி உத்தரவின் பேரில் சாயல்குடி காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பத்மாஸ்வரன், தினேஷ்குமார், அஜித் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.




 


இதனையடுத்து, மதுரை சிறைச்சாலையில் இருந்து இன்று கடலாடி நீதிமன்றம் அழைத்து வரப்பட்டு நீதிபதி முத்துலட்சுமி முன்னிலையில் 3 பேரையும் ஆஜர் படுத்தி சாயல்குடி போலீசார் 3 நாள் கஸ்டடி கேட்ட நிலையில் 1 நாள் கஸ்டடி கிடைத்து உள்ளது.3 பேரையும் சாயல்குடி காவல் நிலையம் மற்றும் சம்பவம் நடைபெற்ற மூக்கையூர் கொண்டு சென்று விசாரணை நடத்த உள்ளனர். மார்ச் 20-ஆம் தேதி ராமநாதபுரத்திற்கு வந்திருந்த டிஜிபி சைலேந்திரபாபு,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள், சமூக விரோதிகளின் செயல்பாடுகள், அவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் விபத்துக்களை குறைப்பது, சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில், எந்தவித பாரபட்சமும், சமரசமும் இன்றி நடவடிக்கை மேற்கொள்வது ஆகியவை தொடர்பாக, டிஜிபி ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்.




 


மேலும், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''தமிழகத்தில் ரவுடிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் காவல் சரக வாரியாக காவல்துறை அதிகாரிகளை அழைத்து ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்து கலந்தாய்வு செய்து உத்தரவிட்டார். மேலும் கஞ்சா விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உத்தரவிட்டிருந்தார்.  ஆனால் டிஜிபி வந்து சென்ற இரு நாட்களிலேயே கஞ்சா போதையில் வந்த மூன்று ரவுடிகள் ஒரு இளம் பெண்ணுக்கு கொடுமை இழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது