நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளம் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகன் (28), இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், கன்னித்தாய் என்ற பெண் குழந்தையும், இறந்த குழந்தை ஆகாஷ்  (3) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். நேற்று காலையில் முருகன் வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் வீட்டில் சுகன்யா தனது குழந்தைகளுடன் இருந்தார். மதியம் சுகன்யா தனது மகளுடன் வீட்டிற்கு வெளியே துணி துவைத்துக் கொண்டு இருந்தார். இதனால் வீட்டின் உள்ளே தரையில் ஆகாஷ் மட்டும் தூங்கிக் கொண்டு இருந்தான். அப்போது, திடீரென்று பயங்கர சத்தத்துடன் முருகன் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுகன்யா மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.





 

அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ஆகாஷ் மீது வீட்டின் மேற்கூரை விழுந்து கிடந்தது. இதை அங்கிருந்தவர்கள் அப்புறப்படுத்தினர். அப்போது, அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. குழந்தை ஆகாஷின் வலது கை துண்டிக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து கிடந்தான். குழந்தையின் உடலை பார்த்து அனைவரும் கதறி அழுதனர்.  

 

இதுகுறித்து உடனடியாக ராதாபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தாசில்தார் ஜேசுராஜன், வள்ளியூர் உதவி சூப்பிரண்டு சமய்சிங் மீனா, இன்ஸ்பெக்டர்கள் சாந்தி, சகாயசாந்தி, ஜான்பிரிட்டோ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆகாஷின் உடலை போலீசார் கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால், இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:-

 

இந்த பகுதியைச் சுற்றி ஏராளமான கல்குவாரிகள் உள்ளன. இந்த குவாரிகளில் பாறைகளை வெடி வைத்து தகர்க்கும்போது, இங்குள்ள வீடுகளில் அதிர்வு ஏற்படுகிறது. இதுபோல் தான் நேற்று குவாரியில் வைத்த வெடி வெடித்தபோது, முருகன் வீட்டின் மேற்கூரை இடிந்து குழந்தை ஆகாஷ் இறந்துள்ளான். எனவே, அங்குள்ள கல்குவாரிகளை உடனடியாக மூட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். அதுவரை ஆகாஷ் உடலை எடுக்கவிடமாட்டோம் என தெரிவித்தனர். 

 

இதையடுத்து பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வீடு கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கல்குவாரிகளை மூடுவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் பேசி முடிவு எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் ஆகாஷ் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ராதாபுரம் அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 3 வயது குழந்தை பலியானது சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.