திருநெல்வேலி -  கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை அருகே ரூ.15 கோடி செலவில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்காக இடம் தேர்வு - தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டு ஆய்வு





தமிழக முதல்வர் அறிவித்தபடி தாமிரபரணி நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் நாகரிகமான ஆதிச்சநல்லூர்,  சிவகளை, கொற்கை அகழ்வாய்வு நடந்த இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் அருங்காட்சியகம் அமையவிருக்கும் இடத்தை தொல்லியல் மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பார்வையிட்டார்.  





 


முன்னதாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் ஒரு கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஆக்சிசன் உற்பத்தி நிலையத்தை தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த பணி 2 மாதத்தில் முடிவுற்றுள்ளது. 
இந்த ஆக்சிசன் உற்பத்தி நிலையத்திலிருந்து நிமிடத்திற்கு 600 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் தாய்சேய் இனவிருத்தி மற்றும் குழந்தைகள் நல பிரிவு கட்டடத்தில் உள்ள நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 15,000 நோயாளிகள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது,


இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய போது,  நெல்லையில் புதிதாக கட்டப்பட உள்ள  அருங்காட்சியகத்தில் கொற்கையில் கண்டெடுக்கப்பட்ட  812 பொருட்கள் , சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட 120,  ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட 1620 பொருட்கள் என மொத்தம் 2067 பொருட்கள் மற்றும் 106 முதுமக்கள் தாழிகள் புதிதாக கட்டப்படும் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது,
தாமிரபரணி நதிக்கரையில் ஆதிச்சநல்லூர்,  சிவகளை, கொற்கை அகழ்வாய்வு நடந்த இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை ஆவணப்படுத்தும் அருங்காட்சியகம் ரூ.15 கோடி செலவில் திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 13 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. 
குகை மனிதன் தொடங்கி முதுமக்கள் தாழிகள் என அரிய பொருட்கள் மூலம் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகமாக அமைய உள்ளது என தெரிவித்தார். மேலும் வெளிநாடுகளில் இருந்து நம்மிடத்தில்  இருக்கக்கூடிய பொருட்களை விளக்கக் கூடிய அளவில் இருக்கக்கூடிய பல்வேறு பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தபட உள்ளது. 




இந்த அருங்காட்சியக வளாகம் என்பது மிகச் சிறந்த வகையில் ஒரு landscape ஆக  உருவாக்கக் கூடிய அளவில் திருநெல்வேலியில் இருக்கக்கூடிய வகையில்  பலரும் சுற்றுலாத் தலமாக  பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வகையில் அமைய இருக்கிறது. இந்த அருங்காட்சியக வளாகத்தை ஒரு செயல்பாட்டுத் தளமாக ஆக்க கூடிய அளவிற்கு பல்வேறு வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளது.



வரலாற்று முந்தைய காலத்தில் குகையில் மனிதர் வாழ்ந்ததற்கான மாடல்கள், பெருங்கற்காலத்தில் இருக்கக்கூடிய புதைக்குழி உடைய மாடல்கள், குகை மாடல், தமிழ் பிராமி  கல்வெட்டுகள் இருக்கக்கூடிய மாடல்கள் தமிழ் கலாச்சாரம், கட்டட கலை  கூறுகளை உருவாக்கும் மாடல்களாக அருங்காட்சியகம் அமைய உள்ளது.
திருநெல்வேலி  மாநகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மலரும் அளவிற்கு அமைக்கப்பட உள்ளது.
இதற்கு வியூ பாயிண்ட் ஒன்றும் அமைப்பதற்கான திட்டமும் உள்ளது எனவும் தெரிவித்தார்.