நெல்லை மாவட்டம் திசையன்விளை கிராமத்தை சுற்றி சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமமானது ராதாபுரம் தாலுகாவில் இருந்து பிரிந்து  தனி தாலுகாவாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் திசையன்விளை தாலுகாவிற்கு உட்பட்ட நவ்வலடி கிராமம் அருகே எருமைகுளம் பஞ்சாயத்து பகுதியில் புதிதாக அமையவிருக்கும் மதுபானக்கடையால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக கூறி நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு அளிக்க வந்தனர்,




அப்போது பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல்  புதிதாக மதுபானக்கடை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்து வரும்  நிர்வாகத்தை கண்டித்தும் மதுக்கடையால் ஏற்படும் பாதிப்பை விளக்கும் வகையிலும் பெண்களுக்கும் ஆண்களும்  ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு வந்து மதுகுடிக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கையில் மதுபாட்டில்களுடன் வந்த அவர்கள் ஆட்சியர் அலுவலகம்  முன்பு அதனை குடிக்க முயன்றனர். இதனை தடுத்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து பேச்சுவார்த்தை  நடத்தினர். தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்தனர், 




இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் பொழுது, திசையன் விளை தாலுகாவானது முதன்மை தாலுகாவாக வளர்ச்சி பாதையில் சென்று கொண்டு இருக்கிறது. இங்கு ஊருக்கு வெளியே இரண்டு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது, இதனை சுற்றியுள்ள கிராமங்கள் பயன்படுத்தி வருகின்றனர், இதனால் ஊருக்குள் எந்த ஒரு சட்ட சிக்கலோ, வழிப்பறியோ இல்லாமல் அமைதியாக சென்று கொண்டு இருக்கிறது, இந்த சூழலில் ஊருக்குள் புதிதாக மதுக்கடை அமையவிருக்கிறது, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. புதிய மதுக்கடை அமையவிருக்கும் இடமானது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடம், குறிப்பாக அப்பகுதியில் பிரசித்தி பெற்ற இசக்கியம்மன் கோவில், தொழில்நுட்ப கல்லூரி, மேல்நிலைப்பள்ளி, மருத்துமனை என மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படும் பரபரப்பான இடமாகும். 



இந்த இடத்தில் புதிய மதுக்கடை அமைவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது, மேலும் விபத்துகளும், செயின் பறிப்பு போன்ற குற்ற சம்பவங்களும் நடைபெற வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து கடந்த 01.11.21 அன்று ஆட்சியருக்கு மனு அளித்தும் இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை, ஏற்கனவே செயல்படும் இரண்டு மதுபானக்கடையோடு நிறுத்தி கொள்ள வேண்டும், புதிய கடை அமைப்பதை நாங்கள் ஏற்று கொள்ள மாட்டோம் என தெரிவித்தனர், இது குறித்து ஆட்சியர் நடவடிக்கை உரிய எடுக்காவிடில் ஊர்மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.   ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் மதுகுடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது