மே 17 இயக்கம் சார்பில் மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்கள் வாழ்வுரிமை மாநாடு நெல்லை பாளையங்கோட்டை லூர்துநாதன் சிலை முன்பு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மதிமுக துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, எஸ்டிபிஐ கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும் தேயிலை தோட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் மாஞ்சோலை தேயிலை தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி,


மாஞ்சோலை தேயிலை தோட்ட பிரச்சனை 100 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று காடுகளை திருத்தி தேயிலை தோட்டம் உருவாக்கப்படடது. தற்போது மாஞ்சோலை தேயிலை தொழிற்சாலை மூடப்படுகிறது. அங்கு பணி செய்த மக்கள் எதுவும் இல்லாமல் வெளியேற்றப்படும் நிலை இருந்து வருகிறது. பிபிடிசி நிறுவனம் என்பது பெரிய நிறுவனம். தேயிலைத் தோட்டத்தில் பணி செய்த தொழிலாளர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அவர்கள் பணி செய்த நாட்களை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் அவர்கள் பணி செய்தார்களோ அதற்குரிய நஷ்ட ஈட்டை ஃபோர்ட், bmw உள்ளிட்ட நிறுவனம் வழங்கியது போல் வழங்க வேண்டும். தமிழக அரசின் தேயிலை நிறுவனமான டான் டீ மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை எடுத்து நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாஞ்சோலை பகுதியில் இருக்கும் மக்களுக்கு தேவையான நிலம் ஒதுக்கப்பட வேண்டும். சமவெளிப் பகுதியில் நிலம் வழங்க வேண்டும் என்ற அரசின் கொள்கை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் பணி செய்து தற்போது ஊதியம் இல்லாமல் உணவு இன்றி வறுமையில் உலாவி வரும் மக்களுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.




அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் சமூக செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்து மாஞ்சோலை விவகாரத்தில் உள்ள பிரச்சனையை சுமூகமாக தீர்க்கும் வகையில் கூட்டுக்குழு அமைக்க நடவடிக்கை எடுத்து மாஞ்சோலை மக்களுக்கான உரிய நிவாரணம் வழங்க வேண்டும். வெறுங்கையோடு தொழிலாளர்கள் வெளியேற்றும் நடவடிக்கை என்பது தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள அவமானம். மே 17 இயக்கம் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கும் என அவர் தெரிவித்தார். பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி நிறுவனமானது பிரிட்டானியா பிஸ்கட்டுகளை விற்பனை செய்யும் நிறுவனமாக உள்ளது. சுமார் 16 ஆயிரம் கோடி வரை லாபம் ஈட்டி வரும் அந்த நிறுவனமாக உள்ளது. இந்த நிறுவனத்துடைய மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிற்சாலை ரூபாய் 2200 கோடி வரை லாபம் ஈட்டி உள்ளது. தொழிலாளர்களுக்கு உரிய நஷ்ட ஈடை வழங்குவது அந்த நிறுவனத்திற்கு மிகப்பெரிய பிரச்சனை ஒன்றும் கிடையாது தேயிலைத் தோட்ட நிறுவனம் உரிய நிவாரணத்தை வழங்கவில்லை என்றால் பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி நிறுவனத்துடைய மிகப்பெரிய லாபம் ஈட்டும் நிறுவனமான பிரிட்டானியா பிஸ்கட்டுகளை தமிழர்கள் புறக்கணிக்கும் போராட்டத்தை அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து முன்னெடுப்போம் என எச்சரிக்கை விடுத்தார். தமிழர்களை வஞ்சித்தால் பொருளாதார ரீதியாக உங்களுக்கான பதிலடி திருப்பித் தர தயாராக இருக்கிறோம். தமிழக அரசு தேயிலை நிறுவனத்திடம் இருந்து உரிய நிவாரணத்தை பெற்று கொடுத்து தோட்ட தொழிலாளர்களுக்கான நிலம் ஒதுக்கி அவர்களது வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.




மதுரை உயர்நீதிமன்றத்தில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களால் தொடரப்பட்ட வழக்கில் வனத்துறை அதிகாரி மூலம் நீதிமன்றத்திற்கு அரசு பதில் கொடுத்துள்ளது.இது ஏற்புடையதல்ல, முறையானதும் அல்ல. இந்த விவகாரத்தில் அரசு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் வனத்துறையை வைத்து பதில் சொல்வது போராடும் மக்களை அவமதிக்கும் செயலாகும். 1999 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோது அரச வன்முறை நிகழ்த்தப்பட்டதை மாஞ்சோலை மக்கள் மறக்கவில்லை. அந்த பிரச்சனையில் ஏற்பட்ட கரையை போக்க இன்றைய ஆட்சியில் உரிய நிவாரணத்தையும் நீதியையும் அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்