இந்திய துறைமுகங்களில் தனிச் சிறப்பு கொண்டதாக திகழும் தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு பல்வேறு கூடுதல் சிறப்புகள் உண்டு. ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு எதிராக 20ஆம் நூற்றாண்டு தொடக்க காலத்தில் தூத்துக்குடி- கொழும்பு இடையே இரண்டு கப்பல்களை சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரம் பிள்ளை முன்னின்று இயக்கியது இன்றுவரை ஆச்சரியத்துடன் பேசப்பட்டு வருகிறது.1974ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நாட்டின் 10ஆவது பெரிய துறைமுகமாக அறிவிக்கப்பட்ட தூத்துக்குடி துறைமுகம், 11.2.2011இல் வஉசி துறைமுக பொறுப்புக் கழகம் என அறிவிக்கப்பட்டது.




தற்போது ஆண்டுக்கு ஏறத்தாழ 38 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு சாதனை புரிந்து வரும் இத்துறைமுகத்தின் மூலம், நேரடியாக சுமார் 5 ஆயிரம் பேரும், மறைமுகமாக பல லட்சம் பேரும் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். இந்த துறைமுகத்தை நம்பி மாவட்டத்தில் பல்வேறு சிறுதொழில்களும், 1500-க்கும் மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. வரலாற்றுடன் தொடர்புடைய துறைமுகங்களில் பிரதானமாக விளங்கும் இந்த துறைமுகத்துக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. 24 மணி நேர செயல்பாடு, இரவு நேரத்திலும் கப்பல் இயக்கம், 12.80 மீட்டர் கப்பல் நிறுத்த தளம், முக்கிய நகரங்களுடன் சாலை மற்றும் அகல ரயில் பாதை வசதி என பல்வேறு வசதிகள் இருப்பதால் தூத்துக்குடி துறைமுகம் அனைவரும் விரும்பும் துறைமுகமாக உள்ளது.மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள இந்தத் துறைமுகம் கடலுக்குள் 4 கி.மீ. வரை ஊடுருவும் ரப்பிள் மவுன்ட் வகை அலைதாங்கிகளால் உருவாக்கப்பட்ட செயற்கை துறைமுகமாகும். புயல் மற்றும் சூறைக்காற்றை தாங்கும் திறன் கொண்ட பாதுகாப்பான துறைமுகம் ஆகும்.




தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கடந்த நிதியாண்டு 2020-21-ல் 31.79 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது.இறக்குமதியை பொருத்தவரையில் 22.53 மில்லியன் டன்களும் (70.86%), ஏற்றுமதியை பொருத்தவரையில் 9.18 மில்லியன் டன்களும் (28.90%) சதவிகிதமும், சரக்குபரிமாற்றம்  0.08 மில்லியன் டன் (0.24%) சதவிகிதமும் கையாண்டுள்ளது. மேலும் துறைமுகம் சரக்குபெட்டகங்கள் கையாளுவதில் 2020-21 நிதியாண்டில்  7.62 இலட்சம் டி.இ.யுக்களை கையாண்டுள்ளது.




இத்துறைமுகத்தின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியையும் பொருளாதாராத்தையும் மேம்படுத்தும் என்பதால் வெளித்துறைமுகம் அமைக்க வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது.இது குறித்து கப்பல் போக்குவரத்தில் முன்னனியில் இருக்கும் நிறுவனத்தின் செயல் அதிகாரியும் ஆழி சூழ் உலகு மற்றும் கொற்கை நாவல்களை எழுதி சாகித்ய அகதமி வருது பெற்ற ஆர்.என். ஜோ டி குரூஸிடம்கேட்டபோது ,செயற்கைத் துறைமுகமேயானாலும், இந்தியாவின் மற்றெந்த துறைமுகங்களைக் காட்டிலும் தொடர் வளர்ச்சியை சாத்தியமாக்கிக் கொண்டிருப்பது தென் தமிழகத்தின் தூத்துக்குடி வ ஊ சி துறைமுகம். பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியிலும், சராசரி 10 சதவீத வருடாந்திர வளர்ச்சி என்பது, இத் துறைமுகத்தின் நிரூபிக்கப்பட்ட வளர்ச்சியின் நேர்மறைக் குறியீடு. ஏற்றுமதி, இறக்குமதிக்கான பிழையற்ற, வேகமான ஆவண நிர்வாகத்திலும் 99.9 சதவீதம் வெற்றி பெற்றிருக்கிறது தூத்துக்குடியின் சுங்க, துறைமுக கூட்டு நிர்வாகம். கோடெக்ஸ் [CODEX] போன்ற இணையவழி ஆவணப் பரிமாற்றத்திலும் நாட்டிலேயே முன்னணித் துறைமுகமாகத் திகழ்கிறது தூத்துக்குடி. 15 கண்டெய்னர் ஃபிரைட் ஸ்டேசன்கள், ஒரு உள்நாட்டு சரக்குப் பெட்டக முனையம், தேசிய, மாநில நெடுஞ்சாலை வசதி, தொடர் வண்டி மற்றும் விமானச் சேவைகளோடு தென் தமிழகத்து சரக்கு உருவாக்கு தளத்தின் பிதான வாயிலாக செயல்படுகிறது.  




தூத்துக்குடி துறைமுகத்தின் கனவுத் திட்டமான, பன்னாட்டு சரக்குப் பெட்டக மாற்று முனையம் இன்னும் கனவாகவே தொடர்கிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, பாராளுமன்ற ஒப்புதலும் பெற்றிருக்கும் வெளிப்புறத் துறைமுகத் திட்டம் விரைவில் அமைந்தாலன்றி, பன்னாட்டு சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைவது சாத்தியமில்லை.  


கடந்த 25 / 02 / 2021 அன்று கோவையில் நடந்த விழாவில், பாரதப் பிரதமர் தூத்துக்குடி வ உ சி துறைமுகம், பன்னாட்டு சரக்குப் பெட்டக மாற்றுமுனையமாக உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையிலும், வெளிப்புறத் துறைமுகத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு இன்னும் நடந்தபாடில்லை. இலங்கையில், நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமே சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் போய்க்கொண்டிருக்கும் தற்போதைய சூழலில், திட்ட அமைவு இந்தியாவின் பொருளாதாரப் பாதுகாப்பு சார்ந்ததாகவும் உருப்பெற்றிருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை